தூத்துக்குடியில் 3-வது நாளாக கடைகள் அடைப்பு -பேருந்துகள் இயங்கவில்லை பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

துப்பாக்கிச் சூட்டை கண்டித்து தூத்துக்குடியில் 3-வது நாளாக கடைகள் அடைப்பு - பேருந்துகள் இயங்கவில்லை பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. #ThoothukudiShooting #SterliteProtest #sterlitekillsthoothukudi

Update: 2018-05-24 05:24 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது. கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 11 பேர் உயிரிழந்தனர்.  மேலும் நேற்று நடந்த சம்பவத்தில் போலீசார் மீண்டும் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் இறந்ததையடுத்து சாவு எண்ணிக்கை 12 ஆக உயர்ந்தது.

இந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்தவரில் செல்வசேகர் என்பவர் இன்று  உயிரிழந்து உள்ளார்.  இதனால் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்து உள்ளது.

தூத்துக்குடியில் கலவரம் பரவிடாமல் தடுப்பதற்காக 5 நாட்களுக்கு இணையதள சேவை முடக்கப்பட்டு உள்ளது.  தொடர்ந்து துப்பாக்கி சூடு சம்பவத்தினை கண்டித்து பல்வேறு இடங்களில் சாலை மறியல் மற்றும் எதிர்ப்பு போராட்டங்கள் நடந்து வந்தன.

இந்த நிலையில், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.  வன்முறை எதுவும் பரவாமல் தடுப்பதற்காக துப்பாக்கி ஏந்திய போலீசாரும் பாதுகாப்பில் ஈடுபட்டு உள்ளனர்.

இதுவரை போராட்டக்காரர்கள் 78 பேர் காவல் துறையால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.  அவர்களுக்கு உடல் பரிசோதனை முடிந்த நிலையில் தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். 

தூத்துக்குடி அரசு பொது மருத்துவமனையில் போலீசார் தொடர்ந்து கைது நடவடிக்கையை எடுத்து வருகின்றனர்.வளாகம் உள்ளே சந்தேகத்துக்கு இடமாக சுற்றித்திரிபவர்களை கைது செய்து வருகின்றனர். மேலும் கருப்புச்சட்டை அணிந்து உள்ளவர்களையும் முன்னெச்சரிக்கையாக கைது செய்கிறது. இதுவரை நூற்றுக்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தூத்துக்குடியில் 3-வது நாளாக கடைகள் அடைப்பு பேருந்துகள் இயங்கவில்லை.தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொடர்ந்து 3வது நாளாக கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான பேருந்துகள் இயங்கவில்லை. பால், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். மூன்றாவது நாளாக தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் அசாதாரண நிலை தொடர்ந்து வருகிறது.

மேலும் செய்திகள்