இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றாமல் பணி நியமனம் மேற்கொண்டால் கடும் நடவடிக்கை ஐகோர்ட்டு எச்சரிக்கை
இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றாமல் ஐ.ஐ.டி. நிறுவனத்துக்கு பேராசிரியர்களை நியமித்தால், கடும் நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்று ஐகோர்ட்டு எச்சரிக்கை செய்துள்ளது.
சென்னை,
சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்தவர் முனைவர் முரளிதரன். இவர், சென்னை ஐ.ஐ.டி. இயக்குனராக முனைவர் பாஸ்கர் ராமமூர்த்தி நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இவரது நியமனம் ஐ.ஐ.டி. விதிமுறைகளை பின்பற்றி மத்திய அரசு மேற்கொள்ளவில்லை என்றும் குற்றம் சுமத்தியிருந்தார்.
இந்த வழக்கை தனி நீதிபதி தள்ளுபடி செய்தார். இதை எதிர்த்து முரளிதரன், சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். மேலும், கூடுதலாக மற்றொரு மனுவையும் தாக்கல் செய்தார்.
முறைகேடு
அந்த மனுவில், ‘ஐ.ஐ.டி. இயக்குனராக பாஸ்கர் ராமமூர்த்தியை நியமித்தது செல்லாது என்று நான் தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போதே, ஐ.ஐ.டி. நிறுவனத்தில் பல்வேறு பதவிகளை பாஸ்கர் ராமமூர்த்தி நிரப்பியுள்ளார். தற்போதும் பலரை நியமிக்கிறார்.
இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றாமல், இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. பேராசிரியர்கள் பதவிகளுக்கு பொது விளம்பரம் எதுவும் கொடுக்காமல், இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றாமல், ஆட்களை நியமித்துள்ளார். எனவே, இதில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது’ என்று கூறியுள்ளார்.
சி.பி.ஐ. விசாரணை
மேலும் அந்த மனுவில், ‘ஐ.ஐ.டி. நிறுவனத்தில் பேராசிரியர் உள்ளிட்ட பதவிகளுக்கு நடைபெற்ற நியமனத்தில் நடந்துள்ள மோசடிகள் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றாமல், மேற்கொண்டுள்ள பணி நியமனத்தை ரத்து செய்யவேண்டும்’ என்றும் கூறியுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஹூலுவாடி ஜி.ரமேஷ், எம்.தண்டபாணி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் ஆஜராகி வாதிட்டார்.
கடும் நடவடிக்கை
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த இடைக்கால உத்தரவில், ‘பேராசிரியர் பணியிடங்களை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை செயலாளர், இடஒதுக் கீட்டு முறையை பின்பற்றி நிரப்பிக்கொள்ளலாம். ஆனால், பணி நியமனம் என்பது இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது.
ஒருவேளை பணி நியமனம், இடஒதுக்கீட்டு கொள்கையை பின்பற்றாமல் மேற்கொள்ளப்பட்டால், கடும் நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும். விசாரணையை ஜூன் 6-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறோம்’ என்று கூறியுள்ளனர்.