தமிழக மருத்துவ மாணவர்கள் இறப்பு குறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் மத்திய மந்திரிகளுக்கு வைகோ கடிதம்

தமிழக மருத்துவ மாணவர்கள் இறப்பு குறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என மத்திய மந்திரிகளுக்கு வைகோ கடிதம் எழுதி உள்ளார்.

Update: 2018-02-27 22:15 GMT
சென்னை, 

மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், மக்கள் நல்வாழ்வு துறை மந்திரி நட்டா ஆகியோருக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

ராமேசுவரத்தை சேர்ந்த கிருஷ்ண பிரசாத் என்ற மாணவர், தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ். படித்து முடித்து, சண்டிகரில் உள்ள மத்திய அரசின் உயர்கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தில் கடந்த ஆறு மாதங்களாக மேல்படிப்பு படித்து வந்தார். இவர் கடந்த 26-ந் தேதி மர்மமான முறையில் இறந்து விட்டார்.

இதேபோல் கடந்த 2016-ம் ஆண்டு திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த சரவணன் என்ற மருத்துவ மாணவரும், கடந்த ஜனவரி மாதம் அதே மாவட்டத்தைச் சேர்ந்த சரத் பிரபு என்ற மருத்துவ மாணவரும் டெல்லியில் மர்மமான முறையில் இறந்தனர். டெல்லி மருத்துவக் கல்லூரிகளில் மேல்படிப்புக்கு இடம் கிடைக்காதவர்களால் இவர்கள் கொலை செய்யப்பட்டு இருக்கலாம்; அதன் மூலம் அந்த வகுப்பில் காலியாகும் இடத்தை வேறு ஒருவர் கைப்பற்றிக் கொள்ள வாய்ப்பு உள்ளது.

இந்த பின்னணியில், கிருஷ்ண பிரசாத் மரணமும், இயற்கையாக நடைபெறவில்லை; அவர் கொலை செய்யப்பட்டு இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பது தெளிவாகிறது. டெல்லியில் மருத்துவ உயர்கல்வி கற்கின்ற தமிழ்நாட்டு மாணவர்களின் உயிர் பாதுகாப்பு குறித்து, தமிழக மக்களிடம் அச்சமும், கவலையும் ஏற்பட்டு இருக்கின்றது.

எனவே, மேலே குறிப்பிட்ட 3 மாணவர்களின் மரணம் குறித்தும், சி.பி.ஐ. விசாரணை மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்