கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் இழப்பீடு வழங்க வேண்டும் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் ஐகோர்ட்டில் வழக்கு

கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்று இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது.

Update: 2018-02-17 23:15 GMT
சென்னை,

கியாஸ் (எல்.பி.ஜி.) டேங்கர் லாரிகளை, எண்ணெய் நிறுவனங்கள் டெண்டர் கோருவதற்கு இருந்து வந்த நடைமுறையை மத்திய அரசு மாற்றி அமைத்தது. அந்தந்த மாநில டேங்கர் லாரி உரிமையாளர்கள் மட்டும் டெண்டரில் பங்கு கொள்ள முடியும் என்று புதிய நிபந்தனை விதிக்கப்பட்டது.

இதனால் மற்ற மாநிலங்களில் விடப்படும் டெண்டரில் கலந்து கொள்ளும் வாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளதாக கூறி, அகில இந்திய அளவில் கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதனால், எண்ணெய் நிறுவனங்கள் குறித்த காலத்தில் தங்களது வாடிக்கையாளர்களுக்கு கியாஸ் சப்ளை செய்வதில் காலதாமதம் ஏற்பட்டது. இதற்கிடையே நாமக்கல்லில் நடந்த டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டத்தில் வேலை நிறுத்தத்தை வாபஸ் வாங்குவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

இழப்பீடு

இந்த நிலையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் சார்பில் வக்கீல் ஆனந்த் நடராஜன் சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ‘டெண்டர் எடுத்த டேங்கர் லாரி உரிமையாளர்கள் குறித்த நேரத்தில் லோடு சப்ளை செய்யாவிட்டால் எண்ணெய் நிறுவனத்துக்கு இழப்பீடு கொடுக்க வேண்டும் என்று ஒப்பந்த விதி உள்ளது. டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் லோடு சப்ளை செய்யப்படவில்லை. இதனால், எண்ணெய் நிறுவனங்களுக்கு பெரிய அளவில் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. எனவே, உரிய இழப்பீடு தொகையை டேங்கர் லாரி உரிமையாளர்கள் வழங்க உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு நாளை (திங்கட்கிழமை) விசாரணைக்கு வருகிறது.

மேலும் செய்திகள்