மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தீ விபத்தால் ஆயிரங்கால் மண்டபத்திற்கு பாதிப்பு ஏதும் இல்லை-நிபுணர் குழு
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தீ விபத்தால் ஆயிரங்கால் மண்டபத்திற்கு பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என இன்று ஆய்வு செய்த நிபுணர் குழு கூறி உள்ளது. #MeenakshiAmmanTemple
மதுரை,
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 2-ந் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் வீர வசந்தராயர் மண்டபம் சேதம் அடைந்தது. மேற்கூரைகள் இடிந்து விழுந்தன. சிலைகள், தூண்களில் விரிசல் ஏற்பட்டது.
தீ விபத்து நடந்த மண்டபத்தை சீரமைக்க 12 நிபுணர்கள் அடங்கிய குழுவை தமிழக அரசு அமைத்தது. ஓய்வு பெற்ற முதன்மை பொறியாளர் பாலசுப்பிரமணியம் தலைமையில் அமைக்கப்பட்ட இந்த குழுவினர் கோவிலில் சேதம் அடைந்த பகுதிகளை பழமை மாறாமல் சீரமைக்க உள்ளனர். இந்த குழுவில் கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், தொல்லியல் கண்காணிப்பாளர் (ஓய்வு) சத்தியமூர்த்தி, இந்திய தொழில் நுட்பக்கழக உதவி பேராசிரியர் அருண் மேனன், கோவில் இணை ஆணையர் நடராஜன், ஸ்தபதி தட்சிணாமூர்த்தி, சிற்பி குமார், மதுரை பொதுப்பணித்துறை பொறி யாளர் சுரேஷ், கோவில் என்ஜினீயர் உள்ளிட்ட 11 பேர் இடம் பெற்றுள்ளனர்.
அரசு அமைத்த இந்த குழுவினர் இன்று மீனாட்சி அம்மன் கோவி லுக்கு வந்தனர். அவர்கள் விபத்து நடந்த வீரவசந்த ராயர் மண்டபம், ஆயிரங்கால் மண்டப பகுதிகள், தூண்களில் சேதம் ஆகியவற்றை பார்வையிட்டனர்.
பின்னர் அவர்கள் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது;-
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தீ விபத்தால் வீரவசந்தராயர் மண்டபம் பாதிக்கப்பட்டுள்ளது.
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தீ விபத்தால் ஆயிரங்கால் மண்டபத்திற்கு பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை பாதிப்படைந்த இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன என கூறியது.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பு பணிகள் செய்ய பரிந்துரைக்கப்பட்டு உள்ளது என உயர்மட்டக் குழு உறுப்பினர் அருண் மேனன் கூறினார்.
தீ விபத்தால், மதுரை மீனாட்சியம்மன் கோயில் வளாகத்தில் 7 ஆயிரம் சதுரஅடி பாதிப்பு என தக்கார் கருமுத்து கண்ணன் கூறினார்.