தொடர் மழை: தீபமலையில் குகை கோவில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது - அதிர்ச்சி வீடியோ

திருவண்ணாமலை தீபமலையில் அமைந்துள்ள குகை நமச்சிவாய ஆலயத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.

Update: 2024-12-02 12:28 GMT

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டத்தில் பெஞ்சல் புயல் காரணமாக நேற்று முன்தினம் காலை முதல் கனமழை பெய்தது. தொடர்ந்து இடைவிடாமல் விடிய, விடிய பெய்த மழை நேற்றும் தொடர்ந்தது. பகல் வேளையில் மழையின் வேகம் அதிகரித்து காணப்பட்டது. இதனால், பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இந்த நிலையில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலுக்கு பின்புறம் அமைந்துள்ள மலை உச்சியில் இருந்து பாறை ஒன்று உருண்டு மலை அடிவாரத்தில் உள்ள வ.உ.சி. நகர் 11-வது தெருவில் உள்ள வீடுகளின் அருகில் விழுந்தது. அப்போது மண் சரிவு ஏற்பட்டதால் அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்குள் மழை நீருடன் மண் இறங்கியது. இதில் ஒரு வீட்டின் மீது மண் சரிவு ஏற்பட்டு முழுவதுமாக மூடியது.

அந்த வீட்டில் கணவன், மனைவி, அவர்களின் குழந்தைகள் 2 பேர் மற்றும் கணவனின் அண்ணன் குழந்தைகள் 3 பேர் என்று மொத்தம் 7 பேர் இருந்ததாகவும், மண் சரிவினால் 7 பேரும் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் உள்ளே சிக்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை டவுன் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் உடனடியாக அங்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து அந்த பகுதியில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றது.

இதற்கிடையில் இன்று காலை வ.உ.சி. நகர் மலைப்பகுதியில் மேலும் ஒரு இடத்தில் மண் சரிவு ஏற்பட்டது. தொடர்ந்து திருவண்ணாமலையில் தென் கிழக்கு பகுதியில் 3-வது இடத்தில் மண் சரிவு ஏற்பட்டது.

இந்த நிலையில், திருவண்ணாமலை தீபமலையில் அமைந்துள்ள குகை நமச்சிவாய ஆலயத்தின் சுற்றுச்சுவர் தொடர் மழையின் காரணமாக இடிந்து விழுந்துள்ளது. நல்வாய்ப்பாக இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பான அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Full View


Tags:    

மேலும் செய்திகள்