ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 5-ம் தேதி இடைத்தேர்தல்

ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.;

Update:2025-01-07 15:29 IST

சென்னை,

2021-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் 159 இடங்களை தி.மு.க. கூட்டணி கைப்பற்றியது. அ.தி.மு.க. கூட்டணி 75 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்ற காங்கிரஸ், போட்டியிட்ட 25 தொகுதிகளில் 18 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் மகன் திருமகன் ஈவேரா வெற்றி பெற்று முதன் முறையாக சட்டமன்றத்துக்குள் நுழைந்தார்.

இதையடுத்து கடந்த ஆண்டு ஜனவரி 4-ந் தேதி திருமகன் ஈவெரா மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததை தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் மீண்டும் காங்கிரஸ் கட்சியே போட்டியிடும் என தி.மு.க. தலைமை அறிவித்தது. அதன்படி, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார். 30 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் எம்.எல்.ஏ.வாக சட்டமன்றத்தில் நுழைந்தார்.

இந்த நிலையில், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கடந்த மாதம் மரணம் அடைந்தார். இதை தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம் அறிவித்தது. இதையடுத்து இடைத்தேர்தலுக்கான தேதியை பிற மாநில சட்டசபை தேர்தல்களோடு, அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 5-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி 8-ம் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. ஈரோடு மாநராட்சி அலுவலகத்தில் மேயர், துணை மேயர் அறைகள் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டன. அரசியல் தலைவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டு மறைக்கப்பட்டன.

* வேட்பு மனு தாக்கல் தொடக்கம் 10.01.2025

* வேட்பு மனு தாக்கல் கடைசி நாள் 17.01.2025

* வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை 18.01.2025

* வேட்பு மனு திரும்பப் பெற கடைசி நாள் 20.01.2025

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் 77 பேர் போட்டியிட்டனர்.

இங்கு போட்டியிட்ட அரசியல் கட்சி வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு:-

1. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் (காங்.) -1,10,156.

2. கே.எஸ்.தென்னரசு (அ.தி.மு.க.) -43,923.

3. மேனகா நவநீதன் (நாம் தமிழர் கட்சி) -10,827.

4. எஸ்.ஆனந்த் (தே.மு.தி.க.) -1,432.

நோட்டா -798.

போட்டியிட்ட 77 வேட்பாளர்களில் அ.தி.மு.க. வேட்பாளரை தவிர மற்ற அனைவரும் டெபாசிட் இழந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்