விஷால் வேட்புமனு : அதிகாரி அலுவலகத்தில் நடந்தது என்ன? வெளியான வீடியோ காட்சிகள்
ஆர்.கே.நகர் தேர்தல்: விஷால் தனது மனுவை ஏற்றுக்கொள்ளும்படி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் கெஞ்சும் வீடியோ காட்சி வெளியாகி உள்ளது.
சென்னை
ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த விஷால் தனது மனுவை ஏற்றுக்கொள்ளும்படி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் கெஞ்சும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் 21ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. ஆர்.கே.நகரில் நடிகர் விஷால் சுயேட்சையாக போட்டியிட்டார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மீது நேற்று பரிசீலனை நடைபெற்றது. அப்போது விஷாலை முன்மொழிந்தவர்களின் பெயர்கள் தவறாக உள்ளதால் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை அடுத்து, தேர்தல் அலுவலகம் முன்பு விஷால் தனது ஆதரவாளர்களுடன் தர்ணாவில் ஈடுபட்டார். தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதில் நியாயமே இல்லை என்றும், தன்னை முன்மொழிந்த நபர்கள் அதிமுகவினரால் மிரட்டப்பட்டதற்கு ஆதாரம் இருக்கிறது என்றும் கூறினார். இதனையடுத்து, மிரட்டலுக்கு உள்ளானதாக கூறப்படும் வேலு என்பவரிடம் தான் பேசிய ஆடியோ ஆதாரத்தையும் விஷால் வெளியிட்டார். இதனால் வேட்புமனு விவகாரத்தில் மேலும் பரபரப்பு ஏற்பட்டது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தான் போட்டியிடக்கூடாது என முன்னதாகவே முடிவு செய்துவிட்டு வேட்புமனு நிராகரிப்பட்டிருப்பதாக நடிகர் விஷால் குற்றம்சாட்டினார். சுயேச்சையாக போட்டியிடும் இளைஞர் ஒருவரை வெற்றி பெற வைப்பேன் என அவர் கூறியுள்ளார். மக்களுக்கு நல்லது செய்ய வந்தால் இதுதான் கதியா என கேள்வி எழுப்பிய அவர், இதுபோன்று இனி நடைபெறக்கூடாது என்ற நோக்கில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில் ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த விஷால் தனது மனுவை ஏற்றுக்கொள்ளும்படி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் கெஞ்சும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. விஷாலுக்கு ஆதரவாகவும், எதிராகவும் சிலர் இந்த வீடியோவை பதிவிட்டு கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஆர்.கே.நகரில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கிய விஷாலின் வேட்புமனு நேற்று நிராகரிக்கப்பட்ட நிலையில் அவருடைய அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்த நிலையில் இன்று கமல்ஹாசனை சந்திக்கும் விஷால், அதனையடுத்து தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது குறித்து விளக்கம் கேட்கவுள்ளார். மேலும் அவர் இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.இதற்காக சட்ட வல்லுனர்களுடன் விஷால் ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளார்.