பெண்மையை இழிவுப்படுத்தியதாக கருத முடியாது வழக்கை ரத்து செய்து ஐகோர்ட்டு உத்தரவு

சமூக வலைதளத்தில் பெண் குறித்து அவதூறான கருத்து தெரிவித்ததை, பெண்மையை இழிவுப்படுத்தியதாக கருத முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2017-12-01 22:15 GMT

சென்னை,

திருப்பூரில் துணிக்கடை நடத்தி வருபவர் சர்மிளா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது கடையில் தன்னை பங்குதாரராக சேர்த்துக் கொள்ளுமாறு அருண் என்பவர் கேட்டுள்ளார். அதற்கு சர்மிளா சம்மதிக்கவில்லை. இதையடுத்து, சர்மிளாவைப் பற்றியும், அவர் நடத்தி வரும் கடையைப் பற்றியும் அவதூறாக அருண் சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.

இதையடுத்து, அருண் தன்னை இழிவுபடுத்தியதாகவும், அருணின் தந்தை ராமசாமி தன்னை அவதூறாக திட்டியதாகவும் கூறி திருப்பூர் போலீசில் சர்மிளா புகார் செய்தார். இதன்படி அருண் மற்றும் அவரது தந்தை ராமசாமி மீது போலீசார், தகவல் தொழில் நுட்ப சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 509–ன் கீழ் (பெண்களை இழிவுபடுத்துதல்) வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அருணும், அவரது தந்தையும் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் விசாரித்தார். மனுதாரர்கள் சார்பில் வக்கீல் சத்யநாராயணன் ஆஜராகி, ‘பெண்ணை இழிவுபடுத்தி சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக கூறி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது ஏற்புடையதல்ல.

இதுதொடர்பாக இந்திய தண்டனைச் சட்டம், பிரிவு 500–ன் கீழ் அவதூறு பரப்பியதாக மட்டுமே வழக்குப்பதிவு செய்ய முடியும், எனவே இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்’ என வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:–

பெண்களுக்கு எதிராக அவர்களின் பெண்மையை களங்கப்படுத்தும் வகையில் நடைபெறும் குற்றங்கள் மீது மட்டுமே இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 509–ன் கீழ் வழக்குப்பதிவு செய்ய முடியும். அதாவது பொது இடங்களில் பெண்களை அடித்தல், கண் அடித்து சைகை காட்டுதல், பொது இடத்தில் பெண்களை ஆபாசமாக திட்டுதல், மொபைல் போன் மூலமாக ஆபாச படங்களையும், செய்திகளையும் பதிவிடுதல், இவற்றை வெளியிட்டு விடுவதாக மிரட்டுதல் போன்றவைதான் பெண்களை இழிவுபடுத்துவதற்கான குற்றங்கள் ஆகும். இதுபோன்ற குற்றங்களுக்குத்தான், சட்டப்பிரிவு 509–ன் கீழ் வழக்குப்பதிவு செய்ய முடியும்.

ஆனால், மனுதாரர் வெளியிட்ட இணையதள பதிவில் பெண்மையை இழிவுபடுத்தும் வகையில் எந்த பதிவும் இல்லை. எனவே அவதூறான கருத்து தெரிவித்ததை, பெண்மையை இழிவுப்படுத்தியதாக கருத முடியாது.

இந்த வழக்கில் சர்மிளாவை, அருணின் தந்தை தொலைபேசியில் தரக்குறைவாக மிரட்டியதாக கூறும் குற்றச்சாட்டை போலீசார் நிரூபிக்கப்படவில்லை. எனவே மனுதாரர்கள் மீதான வழக்கை ரத்து செய்கிறேன்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்