ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை முறைகேடு இல்லாமல் நடத்த வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலை எந்த வித முறைகேடுமின்றி நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

Update: 2017-11-24 18:45 GMT
சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தேர்தல் ஆணையத்தின் அடுத்தடுத்த முடிவுகள் அதன் மீதான நம்பகத் தன்மையை இதுவரை இல்லாத அளவில் சிதைத்திருக்கின்றன. ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அ.தி.மு.க. இரு அணிகளாக உடைந்ததால் அக்கட்சியின் சின்னமும், கொடியும் யாருக்கு? என்ற வினா எழுந்தது. அந்த வினாவுக்கு நியாயமான கால அவகாசத்தில் விடை காண நடவடிக்கை எடுக்காத தேர்தல் ஆணையம், இப்போது ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்காக இரட்டை இலை சின்னம் குறித்த விசாரணையை அவசர, அவசரமாக நடத்தி முடிவை அறிவித்திருக்கிறது.

அடுத்ததாக, இரட்டை இலை சின்னம் அறிவிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. அதுபற்றியும் ஆளுங்கட்சிக்கு முன்கூட்டியே தகவல் கிடைத்து, தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு முன்பாகவே அவசர, அவசரமாக அரசு விழாக்கள் நடத்தி முடிக்கப்பட்டிருக்கின்றன. தமிழக ஆளுங்கட்சிக்கு ஆதரவாகத் தான் தேர்தல் ஆணையம் நடந்து கொள்கிறது என்ற குற்றச்சாற்றை மெய்ப்பிக்கும் வகையில் தான் இந்த நிகழ்வுகள் நடக்கின்றன. இது தேர்தல் ஆணையத்திற்கு பெருமை சேர்க்காது.

தேர்தல் ஆணையம் நினைத்திருந்தால், அங்கு நேர்மையாகவும், சுதந்திரமாகவும் தேர்தல் நடத்துவதற்குரிய சூழலை ஏற்படுத்திய பிறகே தேர்தல் நடத்த முடியும் என்பதை ஐகோர்ட்டில் தெரிவித்து கூடுதல் அவகாசம் பெற்றிருக்கலாம்.

ஆனால், அவ்வாறு செய்யத் தவறியது தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மீது விழுந்த கரும்புள்ளியாக மாறிவிட்டது. இது கண்டிக்கத்தக்கதாகும்.

எனவே, ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலை எந்த வித முறைகேடுமின்றி நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்