ஜெயலலிதா மரணம் குறித்து சசிகலாவிடம் விசாரிக்க வேண்டும் தீபா கணவர் பிரமாண பத்திரம் தாக்கல்

ஜெயலலிதா மரணம் குறித்து சசிகலாவிடம் விசாரிக்க வேண்டும் என்று நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்திடம் தீபாவின் கணவர் மாதவன் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.

Update: 2017-11-20 21:15 GMT
சென்னை,

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த கடந்த செப்டம்பர் மாதம் 25-ந் தேதி ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் 3 மாதங்களில் தனது விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என அரசு உத்தரவிட்டு இருந்தது.

சென்னை சேப்பாக்கம் எழிலக வளாகத்தில் உள்ள கலச மகால் முதல் தளத்தில் ஆணையம் செயல்படுகிறது. இதற்காக அங்கு நீதிமன்ற அறையும், விசாரிக்கப்படுபவர்கள் நிற்கும் கூண்டும் அமைக்கப்பட்டு உள்ளது.

ஜெயலலிதா மரணம் குறித்து தகவல் அளிப்பவர்கள் நேரிலோ, பதிவு தபால் மூலமாகவோ நவம்பர் 22-ந் தேதிக்குள் (நாளைக்குள்) தகவல்களை அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் கணவர் மாதவன், விசாரணை ஆணையத்தின் செயலாளர் பன்னீர்செல்வத்திடம் நேற்று பிரமாண பத்திரம் ஒன்றை தாக்கல் செய்தார்.

பின்னர் மாதவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஜெயலலிதா வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராக்கள் அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டபோது ஏன் செயல்படவில்லை?, சசிகலா மற்றும் அவரது உறவினர்கள், வேலைக்காரர்கள், பாதுகாப்பு காவலர்களிடம் விசாரிக்க வேண்டும்.

தாமதமாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றது, சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு தீவிர சிகிச்சை அளித்தது போன்று ஜெயலலிதாவுக்கு ஏன் அளிக்கப்படவில்லை?, ஜெயலலிதாவை பார்க்க வந்த கட்சி தலைவர்களை தடுத்தது ஏன்? போன்ற கேள்விகள் கேட்கப்பட்டு உள்ளன. ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களை மருத்துவ புலனாய்வு துறையினர் மூலம் விசாரிக்க வேண்டும். சிகிச்சையில் இருந்தபோது எடுக்கப்பட்டதாக கூறப்படும் சி.டி. குறித்தும் விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

விசாரணை ஆணைய செயல்பாடுகள் குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

ஜெயலலிதாவுக்கு மரணம் ஏற்பட காரணம் என்ன?, அவருக்கு உடல் ரீதியாக இருந்த பிரச்சினைகள், மருத்துவமனையில் இருந்தபோது மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை முறைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக விசாரணை ஆணையம் தனது விசாரணையை மேற்கொள்ளும்.

தி.மு.க. பிரமுகர் டாக்டர் சரவணன், முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் ஆனூர் ஜெகதீசன், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் கணவர் மாதவன், அ.தி.மு.க. பிரமுகர் அம்மாபிள்ளை சந்திரன், தேனியில் உள்ள ஒரு கட்சியின் தலைவர் சுபாஷ், அக்கட்சியின் பொதுச்செயலாளர் மோகன் மற்றும் சேலத்தை சேர்ந்த ஐ.ஆர்.எஸ். அதிகாரி ஆகியோர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளனர். இதுதவிர நேரிலும், தபால் மூலமும் 70 பேர் மனு அளித்துள்ளனர். பெறப்பட்ட பிரமாண பத்திரம் மற்றும் மனுக்கள் வரிசைப்படுத்தப்பட்டு வருகிறது.

நாளை (புதன்கிழமை) மாலை 6 மணியுடன் பிரமாண பத்திரம் தாக்கல் செய்வதற்கான கெடு முடிவடைகிறது. அதற்குள் ஜெயலலிதா மரணம் குறித்து தகவல் அளிப்பவர்கள் அளிக்கலாம். அதன்பின்னர் வரும் மனுக்களை ஏற்க இயலாது. நாளை (புதன்கிழமை) முதல் விசாரணை தொடங்க உள்ளது. முதல் நாள் விசாரணையில் ஆஜராகும்படி தி.மு.க. பிரமுகர் டாக்டர் சரவணனுக்கு சம்மன் அனுப்பி உள்ளோம்.

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த லண்டன் டாக்டர் மற்றும் அமைச்சர்களை அழைத்து விசாரிப்பதற்காக சிறப்பு அதிகாரம் ஆணையத்துக்கு வழங்க வேண்டும் என்று அரசுக்கு கடிதம் எழுதி உள்ளோம். விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் கேட்பது குறித்து நீதிபதி தான் முடிவு செய்வார்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள். 

மேலும் செய்திகள்