“பள்ளி மாணவர்களுக்கு பாலியல் கல்வி அவசியம்” நடிகை திரிஷா பேட்டி

“பள்ளி மாணவர்களுக்கு பாலியல் கல்வி அவசியம்” என்று நடிகை திரிஷா கூறினார்.

Update: 2017-11-20 23:00 GMT
சென்னை,

‘யுனிசெப்’ அமைப்பின் குழந்தைகள் உரிமைக்கான நல்லெண்ண தூதராக நடிகை திரிஷா நியமிக்கப்பட்டு இருக்கிறார். அவர் பொறுப்பு ஏற்றுக்கொள்ளும் நிகழ்ச்சியும், உலக குழந்தைகள் தின விழாவும் சென்னையில் நேற்று நடந்தது. இதில் தமிழ்நாடு மற்றும் கேரளாவுக்கான யுனிசெப் அமைப்பின் தலைவர் ஜோசப் சக்காரியா கலந்துகொண்டு திரிஷாவுக்கு தூதருக்கான சான்றிதழை வழங்கினார்.

நிகழ்ச்சியில், தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவி எம்.பி.நிர்மலா, யுனிசெப் தொடர்புகள் நிபுணர் சுகாட்டாராய் மற்றும் பள்ளி குழந்தைகள் கலந்துகொண்டனர். அப்போது, திரிஷா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

யுனிசெப் தூதர் பதவியை பெருமையாக கருதுகிறேன். சினிமா எனக்கு நிறைய கொடுத்து இருக்கிறது. பதிலுக்கு இந்த சமூகத்துக்கு பணி செய்வதற்காகவே இந்த பொறுப்பை ஏற்றுள்ளேன். குழந்தைகள் கல்வி, நல்வாழ்வு, ஊட்டச்சத்து மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை பரவலாக்கும் முயற்சிகளில் ஈடுபடுவேன்.

தமிழக அரசின் ஊட்டச்சத்து குறைபாடற்ற, திறந்தவெளி மலம் கழித்தலற்ற தமிழகம் உருவாக்கும் முயற்சிக்கு ஒத்துழைப்பு அளிப்பேன். 18 வயதுவரை அனைத்து பெண் குழந்தைகளுக்கும் கல்வி அளிக்க வேண்டும். குழந்தை திருமணங்களை தடுக்க பிரசாரம் செய்வேன்.

குழந்தைகளுக்கு பாலியல் கல்வி அவசியம். எனவே பள்ளிகளில், மாணவ-மாணவிகளுக்கு பாலியல் கல்வியை கற்றுக்கொடுக்க வேண்டும். சினிமாவில், குழந்தைகளுக்கு எதிரான காட்சிகள் இருப்பதாக விமர்சிக்கப்படுகிறது. பள்ளி சீருடையில் மாணவ- மாணவிகள் காதலிப்பது போன்ற காட்சிகள் இருக்க கூடாது என்றும் வற்புறுத்தப்படுகிறது.

சினிமா என்பது நிஜமல்ல. எல்லா விஷயங்களிலும் அதை பின்பற்றக்கூடாது. சினிமாவில் மாணவ-மாணவிகள் சீருடையில் காதலிப்பது போன்ற காட்சிகளை நகைச்சுவைக்காக வைக்கலாமே தவிர, அதை தீவிரமாக காட்டக்கூடாது. காதல் என்பதற்கு எனக்கே இன்னும் அர்த்தம் தெரியவில்லை. அதன் பொருளை தேடிக்கொண்டு இருக்கிறேன்.

சினிமா படப்பிடிப்புகளில் குழந்தை தொழிலாளர்கள் இல்லை. மீறி பயன்படுத்தினால், தடுப்பேன். தணிக்கையில், ‘ஏ’ சான்றிதழ் பெற்ற படங்களுக்கு தியேட்டர்களில் குழந்தைகளை அனுமதிக்க கூடாது. சமூக சேவை பணிகளில் ஈடுபடுவதால், அரசியலுக்கு வரப்போகிறேன் என்று அர்த்தம் இல்லை. ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்கினால், அவரது கதாபாத்திரத்தில் நடிக்க விருப்பம் இருக்கிறது.”

இவ்வாறு திரிஷா கூறினார். 

மேலும் செய்திகள்