தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு எதிரொலி: 5 மணி நேரமாக நடைபெற்ற விவசாயிகள் போராட்டம் வாபஸ்
வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவிட்டதையடுத்து 5 மணி நேரமாக நடைபெற்ற விவசாயிகள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
சென்னை,
மதுரை மேலூரில் ஒருபோக பாசனத்திற்கு தண்ணீர் திறக்காமல், நீட்டிப்பு கால்வாய்களில் தண்ணீர் திறக்கப்படும் என்று அரசு அறிவித்ததால் மேலூர் பகுதி விவசாயிகள் கடும் அதிருப்தி அடைந்தனர். தங்களுக்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தி இன்று காலை முதலே போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னைகன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் ஏராளமான விவசாயிகள் மறியலில் ஈடுபட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாலையின் இருபுறத்திலும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
பின்னர் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, வைகை அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டார். 21.11.2017 முதல் 27.11.2017 வரை ஏழு நாட்களுக்கு, திருமங்கலம் பிரதான கால்வாயின் வாயிலாக 200 கன அடி அளவும், பெரியாறு பிரதான கால்வாய் வாயிலாக 700 கன அடி அளவும் தண்ணீர் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
இந்த தகவல் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. அத்துடன், மறியல் போராட்டத்தை கைவிடும்படி அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். இதையடுத்து, மறியல் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக கூறிய விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதன் காரணமாக சுமார் 5 மணி நேரத்திற்குப் பிறகு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து சீரடையத் தொடங்கியது. 7 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிடுவது போதாது என்று விவசாயிகள் சங்க தலைவர் கூறியுள்ளார். குறைந்தது 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.