வருமான வரி சோதனை அ.தி.மு.க.வை அழிக்க நடைபெறும் உச்சக்கட்ட சதி

வருமான வரி சோதனை அ.தி.மு.க.வை அழிக்க நடைபெறும் உச்சக்கட்ட சதி என்று டி.டி.வி.தினகரன் கூறினார்.

Update: 2017-11-20 00:35 GMT
தஞ்சாவூர்,

தஞ்சையில் அ.தி.மு.க. (அம்மா அணி) துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஜெயலலிதாவுடன் 33 ஆண்டுகாலம் உடன் இருந்து அவருக்கு உதவிகள் செய்தவர் சசிகலா. அந்த ஆதங்கத்தில், தனது சகோதரி சசிகலாவை, ஜெயலலிதா பாதுகாக்க தவறிவிட்டார் என்று திவாகரன் கூறி இருப்பார். இதனால் ஜெயலலிதாவை தாக்கி பேசியது என்று அர்த்தம் ஆகாது. இதை அரசியல் ஆக்கக்கூடாது.

ஆடிட்டர் குருமூர்த்தி, போயஸ் கார்டனில் நடந்த சோதனையில் சசிகலா அறையில் இருந்து லேப்டாப், பென்டிரைவ் போன்ற ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது என்று கூறி உள்ளார். அது செயல்படாத கணினி. இது மக்களிடம் அ.தி.மு.க.வை அழிக்க நடைபெறும் முயற்சியின் உச்சக்கட்ட சதி ஆகும். இது அ.தி.மு.க. தொண்டர்களுக்கும், மக்களுக்கும் தெரியும்.

எடப்பாடி பழனிசாமி என்னைப் பார்த்து கட்சியில் எங்கு இருந்தார் என்று கேட்கிறார். முதல்வர் பதவிக்கு தகுதி இல்லாமல் அவர் பிதற்றுகிறார். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பின்னர் ஜெயலலிதாவுக்கு நானும், சசிகலாவும் மெய்க்காப்பாளராக இருந்தோம். நான் மகன் போல இருந்து அவரை பாதுகாத்தேன். ஜெயலலிதா என்னை பெரியகுளம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட வைத்தார்.

அதில் நான் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். என்னை ஜெயலலிதா பேரவை பொதுச்செயலாளராக ஆக்கினார். அப்போது எடப்பாடி பழனிசாமி எங்கு இருந்தார் என்று தெரியாது.

எங்களால் பதவிக்கு வந்துவிட்டு, தங்களை காப்பாற்றிக்கொள்ள, வழக்குகளில் மாட்டிக்கொள்ளாமல் இருப்பதற்காக கட்சியை காட்டிக்கொடுத்து, ஆட்சி அதிகாரம் இருக்கிறது என்ற தைரியத்தில் பேசுபவர்கள் செய்த சதியால் தான் நாங்கள் கட்சியை விட்டு விலக்கப்பட்டோம்.

கட்சி எக்கேடு கெட்டால் அவர்களுக்கு என்ன?. அதன் உச்சகட்டம் தான் ஜெயலலிதா வீட்டில் சோதனை நடத்தியது.

தமிழகத்தின் நலனை இவர்கள் காப்பது இல்லை. ஜெயலலிதா அரசு என்று கூறிக்கொள்ள இவர்களுக்கு தகுதி இல்லை. ஆட்சி அதிகாரத்தில் இருந்தால் போதும் என்கிறார்கள். வடக்கே இருந்து யார் வந்தாலும் அவர்கள் காலைப்பிடித்துக்கொள்ள தயாராக இருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்