‘‘பா.ஜ.க. ஆட்டி வைக்கும் கைப்பாவையாக தமிழக அரசு மாறிவிட்டது’’ டி.ராஜா எம்.பி. தாக்கு

‘‘பா.ஜ.க. ஆட்டி வைக்கும் கைப்பாவையாக தமிழக அரசு மாறிவிட்டது’’ என்றும், ‘‘வருமான வரி சோதனையில் பல முரண்பாடுகள் இருக்கிறது’’, என்றும் டி.ராஜா எம்.பி. கூறினார்.

Update: 2017-11-13 22:00 GMT

சென்னை,

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளரும், எம்.பி.யுமான டி.ராஜா சென்னை தியாகராயநகரில் உள்ள கட்சியின் மாநில அலுவலகத்தில் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

பண மதிப்பு நீக்கம் மற்றும் ஜி.எஸ்.டி. வரி போன்ற நடவடிக்கைகளுக்கு பிறகு இந்திய பொருளாதாரம் நிலைகுலைந்து போயிருக்கிறது. அரசின் அனைத்து துறைகளும் நெருக்கடி நிலையில் இருக்கின்றன. வேலைவாய்ப்பு என்பது கேள்விக்குறியாகி, இளைஞர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளது.

கருப்பு பணத்தை ஒழிப்பதில் இந்த அரசு தோல்வி கண்டிருக்கிறது. ஊழல் ஒழிப்பு என்று வெறும் வாய் சவுடாலில் மட்டுமே மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.

ஜி.எஸ்.டி வரி மீதான மக்களின் கொந்தளிப்பை ஓரளவு அடக்கவே சமீபத்தில் ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்டது. குஜராத் மாநிலத்தில் நடைபெற உள்ள தேர்தலை மனதில் வைத்தும், மக்கள் மனதில் இடம்பிடிக்கவும் இந்த நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கியுள்ளது.

பா.ஜ.க.வின் பொருளாதார கொள்கைகளுக்கு எதிராக மக்கள் திரண்டு உள்ளனர். பா.ஜ.க.வின் மதவெறி அரசியலுக்கு முடிவு கட்டவேண்டும் என்றால், அனைத்து ஜனநாயக கட்சிகள், இடதுசாரிகள், சமூக நல்லிணக்கத்தை பேணும் அனைத்து அமைப்புகளும் ஒன்றிணைய வேண்டும்.

வருமான வரி சோதனை என்பது அரசின் கடமை தான். ஆனால் ஒரு சார்பினரையே குறிவைத்து, குறிப்பிட்ட காலகட்டத்தில் இப்படி ‘மெகா ரெய்டு’ நடத்த வேண்டிய அவசியம் என்ன?

‘வருமான வரி சோதனையில் பா.ஜ.க.வின் தலையீடு எதுவும் இல்லை’, என்று பா.ஜ.க. தலைவர்கள் தாமாக முன்வந்து தன்னிலை விளக்கம் அளிக்கவேண்டிய அவசியமும் என்ன? இந்த வருமான வரி சோதனையில் பல முரண்பாடுகள் உள்ளன. முன்னுக்கு பின் முரணாக பல வி‌ஷயங்கள் இருக்கின்றன. தமிழக அரசும் வாய்மூடி மவுனம் சாதிக்கிறது. பா.ஜ.க. ஆட்டிவைக்கும் கைப்பாவையாக தமிழக அரசு மாறிவிட்டது.

இக்கட்டான ஒரு அரசியல் சூழலில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய மாநாடு அடுத்த ஆண்டு (2018) ஏப்ரல் மாதம் 25–ந்தேதி முதல் 29–ந்தேதி வரையிலான 5 நாட்கள் கேரளா மாநிலம் கொல்லத்தில் நடக்கிறது. அதற்கு முன்பாக திருவாரூர் மாவட்டம் மன்னார்க்குடியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில மாநாடு வருகிற மார்ச் மாதம் இறுதியில் நடக்க இருக்கிறது. இந்த மாநாடுகள் அரசியலில் ஒரு நல்ல திருப்பத்தை ஏற்படுத்தும். நல்ல அரசியல் கோட்பாட்டுக்கு சீரிய வழியமைத்து கொடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் உடனிருந்தார்.

மேலும் செய்திகள்