த.மா.கா. 4–ம் ஆண்டு தொடக்க விழா: திருச்சியில் 25–ந் தேதி பொதுக்கூட்டம்
திருச்சியில் பொதுக்கூட்டம் நடத்த உள்ளதாக மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னை,
தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கூட்டம் சென்னை மயிலாப்பூர், சி.ஐ.டி. காலனியில் உள்ள கவிக்கோ மன்றத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தலைமை தாங்கினார். மாநில மூத்த துணை தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன், துணை தலைவர்கள் என்.எஸ்.வி.சித்தன், கோவை தங்கம், கத்திப்பாரா ஜனார்த்தனன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கொட்டிவாக்கம் முருகன், சைதை மனோகரன், பிஜூசாக்கோ உள்பட 73 மாவட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். த.மா.கா.வில் மொத்தம் 78 மாவட்ட தலைவர்கள் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் வருமாறு:–
தமிழ் மாநில காங்கிரசின் 4–ம் ஆண்டு தொடக்கவிழா மற்றும் பொதுக்கூட்டம் திருச்சி மலைக்கோட்டை மாநகர் உழவர் சந்தை மைதானத்தில், வருகிற 25–ந் தேதி மாலை 5 மணிக்கு நடைபெற இருக்கிறது. இதில் ஜி.கே.வாசன் பேருரை நிகழ்த்துகிறார்.
தமிழகத்தில், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதில் தமிழ் மாநில காங்கிரஸ் முழு மனதோடு தன்னை ஈடுபடுத்திக்கொள்ளும். மழைக்காலங்களில் வீணாக கடலில் கலக்கின்ற நீரை சேமித்து வைக்கின்ற திட்டமிடலை மத்திய, மாநில அரசுகள் இணைந்து நிறைவேற்ற வேண்டும்.
உள்ளாட்சி தேர்தலை தமிழக அரசு உடனடியாக நடத்த வேண்டும். குற்றப் பின்னணி உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடைசெய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்ததை தமிழ் மாநில காங்கிரஸ் வரவேற்கிறது. முதியோர் உதவித் தொகையை ரூ.2 ஆயிரமாக உயர்த்தி தர வேண்டும்.
தமிழகத்தில் கடந்த மாதத்தில் டெங்கு, மலேரியா போன்ற பல்வேறு காய்ச்சல்களால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், தற்பொழுது பெய்த மழையில் சென்னையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுமிகளின் குடும்பத்திற்கும், திருவாரூரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த விவசாயியின் குடும்பத்திற்கும் ஆழ்ந்த இரங்கலை தமிழ் மாநில காங்கிரஸ் தெரிவித்துக்கொள்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கவேண்டும். மேற்கண்டவை உள்பட பல்வேறு தீர்மானங்களும் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.