முதல்-அமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் வெள்ள நிவாரண பணிக்கு தீவிர நடவடிக்கை

வெள்ள நிவாரண பணிகளை துரித மாக மேற்கொள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். சென்னை பெருநகரம் மற்றும் காஞ்சீபுரம் மாவட்டத்தில் பணிகளை ஒருங்கிணைக்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

Update: 2017-11-03 00:52 GMT
சென்னை,

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவமழை தொடங்கியதையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், பருவமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், மேற்கொள்ளப்பட வேண்டிய நிவாரணப்பணிகள் குறித்தும் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாட்டில் 27.10.2017 அன்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கி தீவிரமடைந்துள்ளது. முதல்-அமைச்சர் உத்தரவின்படி, பருவமழையால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்று, அவர்களுக்கு தேவையான, உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், மீட்புப்பணிகளை ஒருங்கிணைக்கவும், போர்க்கால அடிப்படையில் நிவாரணப்பணிகளை மேற்கொள்ளவும், அந்தந்த மாவட்ட அமைச்சர்களுடன் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அனைத்து மாவட்டங்களுக் கும் நியமிக்கப்பட்டுள்ளார் கள். பெருநகர சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களுக்கும் மூத்த இந்திய ஆட்சிப்பணி அலுவலர்களை ஒருங்கிணைப்பாளர்களாக நியமித்து ஏற்கெனவே ஆணையிடப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களாக சென்னை, காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் அதிக அளவில் மழை பெய்துள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் காஞ்சீபுரம் மாவட்டத்தில் பருவமழையால் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நிவாரணப்பணிகளை ஒருங்கிணைத்து, துரிதப்படுத்த அமைச்சர்கள் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

மழைநீர் புகாத வண்ணம் தெருவோர மின்சார பகிர்மான பெட்டிகளை நல்லமுறையில் பராமரித்து அவற்றை உயரத்தில் அமைக்க வேண்டும் எனவும், தண்ணீர் தேங்கும் பகுதிகளில் கூடுதல் மின் மோட்டார்களை பயன் படுத்தி தண்ணீரை விரைவாக வெளியேற்ற வேண்டும் எனவும், தண்ணீர் விரைவாக வெளியேறாத பகுதிகளை உடனடியாக கண்டறிந்து அதனை வெளியேற்றுவதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதாரத் துறை மூலம் மருத்துவ முகாம்களை நடத்தி, தொற்று நோய்கள் ஏற்படாத வண்ணம் அப்பகுதியை சுத்தம் செய்து பிளிச்சிங் பவுடர் தெளிக்க வேண்டும் எனவும், அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்