ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில்நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலைக்கோட்டுதயம் மீண்டும் போட்டி சீமான் அறிவிப்பு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலைக்கோட்டுதயம் மீண்டும் போட்டியிடுவார் என்று சீமான் அறிவித்துள்ளார்.

Update: 2017-10-17 21:45 GMT
சென்னை,

கவியரசு கண்ணதாசனின் 36-வது ஆண்டு நினைவு நாளையொட்டி, சென்னை தியாகராயநகரில் உள்ள அவருடைய சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

இதையடுத்து சீமான் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழ் இனத்தின் பெருமைமிக்க இலக்கிய அடையாளம் கவியரசு கண்ணதாசன். இசையின் வழியே இனிய தமிழை வளர்த்த தமிழர். அவருடைய பாடலில் மயங்காத தமிழர்கள் இருக்கவே முடியாது.

ஆர்.கே.நகர் இடைதேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும். கடந்தமுறை எங்கள் கட்சியின் சார்பில் போட்டியிட்ட கலைக்கோட்டுதயம் மீண்டும் போட்டியிடுவார். எங்களுடைய பலம் என்ன என்பதை ஆர்.கே.நகர் தேர்தலில் நிரூபிப்போம். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் எப்போது நடந்தாலும் நியாயமாக நடைபெறாது.

வாக்குக்கு பணம் வாங்குபவர்கள் மீதும், கொடுப்பவர்கள் மீதும் தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும். அப்படி எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் சிலவற்றை ஊடகத்தின் மூலம் வெளிச்சத்திற்கு கொண்டுவர வேண்டும். இவ்வாறு செய்தால் தான் வாக்குக்கு பணம் கொடுப்பவர்களும், வாங்குபவர்களும் அச்சத்தினால் தவறு செய்வதை தவிர்க்க வாய்ப்புள்ளது.

ஆனால் இதுபோன்ற கடுமையான நடவடிக்கைகளை எடுக்க தேர்தல் ஆணையம் முன்வருவதில்லை. அ.தி.மு.க. 46-வது ஆண்டு தொடக்க விழா கொண்டாடுவதைவிட, மூடு விழா கொண்டாடுவதே நல்லது.

டெங்கு காய்ச்சலால் தமிழகத்தில் உயிர் இழப்புகள் அதிகரித்துள்ளது. டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதில் அரசின் செயல்பாடுகள் மெத்தனமாக உள்ளன. இந்நிலையில் டெங்கு பாதிப்பை மத்திய குழு ஆய்வு செய்தது வெறும் கண்துடைப்பு தான்; அரசு நியமிக்கும் மருத்துவக்குழு, அரசுக்கு எதிராக எப்படி அறிக்கை அளிக்கும்?

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்