குட்கா ஊழல் விவகாரத்தில் 17 பேர் மீது வழக்குப்பதிவு; அமைச்சர், அதிகாரிகள் பெயர் இடம் பெறாதது ஏன்?

குட்கா ஊழல் வழக்கில் அமைச்சர் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் பெயர் இடம் பெறாதது ஏன் என்பதற்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் விளக்கம் அளித்தனர்.

Update: 2017-10-10 23:15 GMT

சென்னை,

குட்கா ஊழல் பிரச்சினையில் அமைச்சர் விஜயபாஸ்கர், சென்னை நகரில் போலீஸ் கமி‌ஷனர்களாக பணியாற்றிய ஜார்ஜ், டி.கே.ராஜேந்திரன் ஆகியோர்கள் மீதும், புகார்கள் கூறப்பட்டது. ஆனால், அவர்களது பெயர், லஞ்ச ஒழிப்பு போலீசாரின் முதல் தகவல் அறிக்கையில் (எப்.ஐ.ஆர்), இடம்பெறவில்லை என்று கூறப்படுகிறது.

இதுபற்றி லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டபோது, கூறியதாவது:–

குட்கா பிரச்சினையில், வழக்குப்பதிவு செய்யப்பட்டு 2 வாரங்களுக்கு மேல் ஆகிவிட்டது. புகாரில் இடம் பெற்றவர்கள் அனைவர் மீதும் வழக்குப்பதிவு செய்யவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. எங்களுக்கு கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் தான் முதல் கட்டமாக 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களது பெயர் விவரங்களை வெளியிடமுடியாது.

அடுத்தக்கட்டமாக சோதனை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் உள்ளது. விசாரணை இன்னும் முடிவடையவில்லை. விசாரணை முடிந்தபிறகு தான் இந்த வழக்கு தொடர்பான தகவல்களை நாங்கள் வெளியிடமுடியும்.  இவ்வாறு தெரிவித்தனர்.

மதுரையில், ரெயில்வே போலீசில் துணை சூப்பிரண்டாக பணியாற்றும் மன்னர்மன்னன் செங்குன்றத்தில் உதவி போலீஸ் கமி‌ஷனராக பணியாற்றியுள்ளார். அவரது பெயரும் இந்த வழக்கில் உள்ளதாக தகவல் வெளியானது.

இதுபற்றி அவரிடம் நிருபர்கள் செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர் கூறியதாவது:–

நான் 2014– முதல் 2015–ம் ஆண்டு வரை, 2 ஆண்டுகள் செங்குன்றத்தில் உதவி கமி‌ஷனராக பணியாற்றியிருக்கிறேன். எனக்குப்பிறகும், 3 பேர் உதவி கமி‌ஷனர்களாக பணிபுரிந்துள்ளனர். வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, நான் செங்குன்றத்தில் பணியாற்றவில்லை. என்மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் இந்த பிரச்சினையில் வழக்குப்பதிவு செய்துள்ளதாக நண்பர்கள் சிலர் தெரிவித்தனர்.

அது உண்மையா? என்று தெரியவில்லை. என்னிடம் இந்த பிரச்சினை தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் இதுவரை எந்த விசாரணையும் நடத்தவில்லை. யார்மீது வேண்டுமானாலும் வழக்குப்பதிவு செய்யலாம். ஆனால், வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவேண்டும். அதுவரையில், யாரையும் குற்றவாளி என்று சொல்ல முடியாது.  இவ்வாறு அவர் கூறினார்.

இந்த வழக்கில் அடுத்தக்கட்டமாக லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடவடிக்கையும், கைது நடவடிக்கையும் எடுப்பார்கள் என்று தெரிகிறது. இதனால் இந்த வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்