ஆயுள் தண்டனை கைதி பாஷாவை முன்கூட்டியே விடுதலை செய்வதை எதிர்க்கும் மனு தள்ளுபடி; ஐகோர்ட்டு உத்தரவு
கோவையில் 1998–ம் ஆண்டு நடந்த தொடர் வெடிகுண்டு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருப்பவர் ‘அல் உம்மா’ இயக்க தலைவர் எஸ்.ஏ.பாஷா.
சென்னை,
சென்னை ஐகோர்ட்டில் முன்கூட்டியே இவரை விடுதலை செய்யக்கோரி அவரது மகள் முபினா, மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் தன்னையும் ஒரு மனுதாரராக சேர்க்க வேண்டும் என்றும், எஸ்.ஏ.பாஷாவை முன்கூட்டியே விடுதலை செய்யக்கூடாது என்று வலியுறுத்தியும் இந்து முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் கே.கோபிநாத் என்பவர் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுக்களையெல்லாம் நீதிபதிகள் ராஜீவ் சக்தேர், என்.சதீஷ்குமார் ஆகியோர் விசாரித்தனர். பின்னர் கோபிநாத் மனுவை தள்ளுபடி செய்து நேற்று உத்தரவிட்டனர்.
அந்த உத்தரவில், ‘எஸ்.ஏ.பாஷாவை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பான வழக்கில் அரசு தனது நிலையை இந்த ஐகோர்ட்டுக்கு தெரிவிக்கும். அதனால் கோபிநாத்தின் மனு தேவையற்றது என்று கருதி அதை தள்ளுபடி செய்கிறோம்’, என்று நீதிபதிகள் கூறினர்.