சென்னை நோக்கி வந்த போது விபத்தில் சிக்கிய காரில் இருந்து ரூ.20 கோடி மரகதலிங்கம் பறிமுதல்

சென்னை நோக்கி வந்த போது விபத்தில் சிக்கிய காரில் இருந்து ரூ.20 கோடி மதிப்புள்ள மரகதலிங்கத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2017-10-06 22:00 GMT
விராலிமலை,

சென்னை நோக்கி வந்த போது விபத்தில் சிக்கிய காரில் இருந்து ரூ.20 கோடி மதிப்புள்ள மரகதலிங்கத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக விபத்தில் படுகாயமடைந்த 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரையில் இருந்து சென்னை நோக்கி நேற்று ஒரு கார் வந்து கொண்டிருந்தது. காரில் தேனி பாலோடையை சேர்ந்த முருகன் (வயது 45), மதுரை மேலூர் காசி (27), ஒத்தகடை அசோக் சக்கரவர்த்தி (55), சென்னை அரும்பாக் கத்தை சேர்ந்த தங்கமாரியப்பன் (55) ஆகியோர் இருந்தனர். காரை காசி ஓட்டி வந்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே கார் வந்தபோது, திருச்சியில் இருந்து மதுரை நோக்கி சென்ற அரசு பஸ் மீது கார் மோதியது. இதில் காரில் இருந்த 4 பேரும் படுகாயமடைந்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விபத்தில் சிக்கிய கார், பஸ்சை அப்புறப்படுத்தினர். அப்போது காரை சோதனை செய்தனர். அதில் சுமார் 7 கிலோ எடையுள்ள மரகதலிங்கம் இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அதை பறிமுதல் செய்து விராலிமலை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

விபத்தில் சிக்கிய காரின் பின்பகுதி கண்ணாடியில் அண்ணா எம்.ஜி.ஆர். திராவிட முன்னேற்ற கழகம் என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது. மேலும் காரின் முன் பகுதியில் அந்த கட்சியின் கொடி கட்டப்பட்டிருந்தது. பறிமுதல் செய்யப்பட்ட மரகதலிங்கத்தின் மதிப்பு சுமார் ரூ.20 கோடி இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து காரில் வந்தவர்களுக்கு மரகதலிங்கம் எப்படி கிடைத்தது?, இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என காயம் அடைந்த முருகன் உள்ளிட்ட 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்