எடப்பாடி அரசை அடுத்த வாரம் வீட்டுக்கு அனுப்புவோம் டிடிவி தினகரன் ஆவேசம்

எடப்பாடி பழனிச்சாமி அரசை அடுத்த வாரம் வீட்டிற்கு அனுப்புவோம் என டிடிவி தினகரன் ஆவேசமாக பேட்டியளித்து உள்ளார்.

Update: 2017-09-15 07:59 GMT


சென்னை, 

 
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், பொதுச்செயலாளர் சசிகலா கைகாட்டிதான் எடப்பாடி பழனிச்சாமி முதல்-அமைச்சராக்கப்பட்டார். அவரது படத்தை தூக்கி எறிந்ததோடு பொதுக்குழு என்ற பெயரில் ஒரு கூட்டத்தை கூட்டி அவரை நீக்குவதாக சொல்லும் அளவுக்கு சென்றிருக்கிறார். அவரை வீட்டுக்கு அனுப்பும் நேரம் நெருங்கி விட்டது. அடுத்த வாரம் அவரது ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம். எங்கள் எம்.எல்-.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்று கடந்த மாதம் 22-ந் தேதி கவர்னரிடம் மனு கொடுத்தார்கள்.

நாங்கள் 3 வாரம் பொறுத்து இருந்தோம். கவர்னர் நடவடிக்கை எடுக்கவில்லை. உட்கட்சி விவகாரம் என்று காலம் தாழ்த்தி வருகிறார்.

எதிர்க்கட்சியான தி.மு.க. இந்த வாய்ப்பை பயன்படுத்தி கோர்ட்டில் வழக்கு போட்டுள்ளது. எங்கள் எம்.எல்.ஏ.க்களும் வழக்கு தொடர்ந்துள்ளனர். இப்போது எங்கள் எம்.எல்.ஏ.க்களை மிரட்டியும், உருட்டியும் பார்க்கிறார்கள். ஆனாலும் எதுவும் நடக்க வில்லை. அவரை முதல்வராக்கியது எங்கள் எம்.எல்.ஏ.க்கள். ஆனால் அவரை முதல்வர் பதவியில் இருந்து நீக்க சதி செய்தவர் ஓ.பி.எஸ். இன்று அதே ஓ.பி.எஸ்.சுடன் கூட்டணி வைத்துள்ளனர். இதுதான் கலியுகம். அதர்மமும், துரோகமும் வென்றதாக சரித்திரம் இல்லை. துரோகத்துக்கு சட்டமன்றத்தில் முடிவு கட்டுவோம்.

தி.மு.க. எதிர்க்கட்சி. அவர்களுடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ எந்த தொடர்பும் இல்லை. ஆனால் தெரிந்தோ, தெரியாமலோ மு.க.ஸ்டாலின் எங்களுக்கு உதவி வருகிறார். இது யதார்த்தமாக நடக்கிறது. சபாநாயகர் அறைக்கு எங்கள் வக்கீல் சென்றபோது அங்கு நடந்த சூழ்நிலைகளை பார்த்து இருக்கிறார். எங்கள் எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து விட்டு குறுக்கு வழியில் திங்கட்கிழமை வாக்கெடுப்பு நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள். அதை பார்த்ததும் அந்த வாய்ப்பை நாங்கள் பயன்படுத்திக் கொண்டோம். அவ்வளவுதான்.

நாங்கள் நம்பிக்கை வாக்கெடுப்பு கொண்டு வரும்போது தி.மு.க.வும் வாய்ப்பை பயன்படுத்தினால் நாங்கள் என்ன செய்ய முடியும்?
எடப்பாடி பழனிசாமியை நீக்க கூறினோம். வேறு வழியில்லை என்றால் கவிழ்ப்போம். இறைவனும், சட்டமும் எங்களிடம் உள்ளனர். நிச்சயம் நீதி கிடைக்கும் என்றார். 

மேலும் செய்திகள்