திருவொற்றியூர் அருகே பயங்கரம் ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வாலிபர் படுகொலை
திருவொற்றியூர் அருகே ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வாலிபர் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கஞ்சா வியாபாரி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவொற்றியூர்,
சென்னை திருவொற்றியூர் ஜோதி நகர் 8-வது தெருவில் வகித்து வருபவர் அஜெய்குமார். இவர், திருவொற்றியூர் மெட்ரோ ரெயில் பணியில் ஒப்பந்த அடிப்படையில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மகன் அவினாஸ் பூசன்(வயது 28). ஐ.டி.ஐ. படித்து விட்டு வேலை தேடி வந்தார்.
கடந்த 7-ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற அவினாஸ் பூசன் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. அவர் எங்கே சென்றார் என்பதும் தெரியவில்லை. இதையடுத்து மகனை காணவில்லை என கடந்த 10-ந்தேதி அஜெய்குமார், சாத்தாங்காடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டல்
இந்த நிலையில் அஜெய்குமாரின் செல்போனுக்கு அவினாஸ் பூசன் செல்போன் எண்ணில் இருந்து பேசிய மர்ம நபர், “உங்கள் மகனை கடத்தி வைத்து உள்ளோம். ரூ.50 லட்சம் பணம் கொடுத்தால்தான் விடுவிப்போம்” என்று மிரட்டினார்.
இதனால் பயந்துபோன அஜெய்குமார் அளித்த புகாரின் பேரில் மாதவரம் போலீஸ் துணை கமிஷனர் கலைச்செல்வம், எண்ணூர் போலீஸ் உதவி கமிஷனர் தினகரன், சாத்தாங்காடு இன்ஸ்பெக்டர் கெங்கேஸ்வரன் மற்றும் போலீசார் துரித விசாரணையில் இறங்கினர்.
மர்மநபர் பேசிய செல்போன் எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்தியதில் சாத்தாங்காடு போலீஸ் நிலையம் அருகே 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சடையங்குப்பம் பர்மா நகர் பகுதியில் இருந்து மர்ம நபர் பேசியது தெரிய வந்தது. இதையடுத்து அவரது நண்பர்களிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர்.
2 பேர் கைது
அவினாஸ் பூசனின் நெருங்கிய நண்பர் வெங்கடேசன்(30). இவர்கள் இருவரும் 8-ம் வகுப்பு வரை ஒன்றாக படித்தவர்கள். கஞ்சா வியாபாரியான வெங்கடேசன், கஞ்சா விற்ற வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டவர். தற்போது ஜாமீனில் வெளியே வந்து சாத்தாங்காடு போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போட்டு வருகிறார்.
இதையடுத்து போலீசார், சந்தேகத்தின் பேரில் வெங்கடேசனை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர், அவினாஸ் பூசனை கடத்தி கொலை செய்து விட்டு, அவரது உடலை புதரில் புதைத்து விட்ட திடுக்கிடும் தகவலை தெரிவித்தார்.
இதையடுத்து அவரையும், கொலைக்கு உடந்தையாக இருந்த அவரது நண்பரான பீகாரை சேர்ந்த ரமேஷ்(24) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய சூர்யா(28) என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
கைதான வெங்கடேசன் போலீசாரிடம் அளித்துள்ளதாக கூறப்படும் வாக்குமூலம் வருமாறு:-
இரும்பு கம்பியால் தாக்கி கொலை
நானும், அவினாஸ் பூசனும் நண்பர்கள். கடந்த 7-ந்தேதி நான், அவினாஸ் பூசன், ரமேஷ், சூர்யா ஆகிய 4 பேரும் சடையங்குப்பம் இரும்பு பாலம் அருகே புதர் பகுதியில் அமர்ந்து மது அருந்தினோம். அவினாஸ் பூசனின் தந்தை மெட்ரோ ரெயிலில் வேலை பார்ப்பதால் அவரிடம் நிறைய பணம் இருக்கும் என்று நினைத்தோம்.
உனது தந்தையை மிரட்டி பணம் வாங்கினால் ஜாலியாக செலவு செய்யலாம் என்று அவினாஸ் பூசனிடம் கூறினோம். அதற்கு அவர் மறுத்தார்.
இதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நான்(வெங்கடேசன்), ரமேஷ், சூர்யா 3 பேரும் சேர்ந்து அவினாஸ் பூசனை இரும்பு கம்பியால் தலையில் தாக்கி கொலை செய்தோம்.
புதரில் உடல் புதைப்பு
பின்னர் அங்குள்ள புதரில் பள்ளம் தோண்டி பிணத்தை புதைத்தோம். அதன் பிறகு அவினாஸ் பூசனின் செல்போனில் இருந்த சிம்கார்டை எடுத்து எனது செல்போனில் போட்டு அவரது தந்தைக்கு போன் செய்து உங்கள் மகனை கடத்தி விட்டோம். ரூ.50 லட்சம் தந்தால் விடுவிப்போம் என்று கேட்டு மிரட்டினேன்.
மகனின் செல்போன் நம்பரில் இருந்து போன் வந்ததால் அவினாஸ் பூசன் உயிரோடு இருப்பதாக நினைத்த அஜெய்குமார், தான் ரூ.25 ஆயிரம் மட்டுமே சம்பளம் வாங்குவதாகவும், தன்னால் அவ்வளவு பணம் கொடுக்க முடியாது என்றும் கூறினார்.
ஆனால் நாங்கள் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டியதால் அவர் போலீசில் புகார் செய்து விட்டார். பணம் கிடைத்தால் அதை பெற்றுக்கொண்டு செல்போனை அவரிடம் கொடுத்து விட்டு தப்பிச்செல்ல நானும், எனது நண்பர்களும் திட்டமிட்டு இருந்தோம்.
இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
உடல் தோண்டி எடுப்பு
அவினாஸ் பூசன் உடல் புதைக்கப்பட்ட இடத்தை கொலையாளிகள் அடையாளம் காட்டினர். அவரது உடல் இன்று(வியாழக்கிழமை) காலை 9 மணியளவில் திருவொற்றியூர் தாசில்தார் செந்தில்நாதன் முன்னிலையில் தோண்டி எடுக்கப்படுகிறது.
இந்த படுகொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உறவினர்கள் மறியல்
இதற்கிடையில் கொலையான அவினாஸ் பூசன், உடலை உடனடியாக தோண்டி எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அவரது உறவினர்கள் ஜோதிநகர் அருகே மணலி விரைவு சாலையில் நேற்று மாலை திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த சாத்தாங்காடு போலீசார், மறியலில் ஈடுபட்ட உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சில நடைமுறை சிக்கல்கள் உள்ளதால் கண்டிப்பாக நாளை (அதாவது இன்று) அவினாஸ் பூசன் உடல் தோண்டி எடுக்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்கு பிறகு உங்களிடம் ஒப்படைக்கப்படும் என்று உறுதி கூறினர். அதை ஏற்று சாலை மறியலை கைவிட்டு உறவினர்கள் கலைந்து சென்றனர்.