கல்லூரி ஆசிரியர்களும் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்
கல்லூரி ஆசிரியர்களும் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள் என்று பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்க தலைவர் தெரிவித்தார்.
சென்னை,
பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரி ஆசிரியர்களும் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள் என்று பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்க தலைவர் ஜெ.காந்திராஜ் தெரிவித்தார்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ–ஜியோ கூட்டமைப்பின் சார்பில் போராட்டம் நடந்து வருகிறது. இதில் சிலர் போராட்டத்தை ஒத்திவைத்துள்ளனர்.
ஜாக்டோ–ஜியோ கூட்டமைப்பின் சார்பில் மாவட்ட தலைநகரங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. சென்னையில் கலெக்டர் அலுவலகம் முன்பு இந்த மறியல் நடக்கிறது.
அனைத்து கல்லூரி ஆசிரியர்களும் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் மற்றும் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதுகுறித்து பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்க (ஏ.யு.டி.) தலைவர் ஜெ.காந்திராஜ் கூறியதாவது:–
போராட்டம் குறித்து முடிவெடுக்க எங்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் 10–ந் தேதி கூடியது. இந்த கூட்டத்தில் எடுத்த முடிவுப்படி இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்திலும், போராட்டங்களிலும் ஈடுபடுகிறோம். மாவட்ட தலைநகரங்களில் இன்று மறியல் போராட்டம் நடத்த உள்ளோம்.
ஏற்கனவே மதுரை காமராஜ் பல்கலைக்கழக ஆசிரியர் கழகமும் (மூட்டா), தமிழ்நாடு அரசு கல்லூரிகளின் ஆசிரியர்கள் சங்கமும் இந்த கோரிக்கைகளுக்காக போராட்டம் நடத்தி வருகின்றன. நாளை (புதன்கிழமை) காத்திருப்பு போராட்டம் நடைபெற உள்ளது.
இவ்வாறு பேராசிரியர் ஜெ.காந்திராஜ் தெரிவித்தார்.