ஓ.என்.ஜி.சி. மேலும் 110 எண்ணெய் கிணறுகள் அமைத்தால் காவிரி பாசன பகுதிகள் பாலைவனமாக மாறும்

ஓ.என்.ஜி.சி. மேலும் 110 எண்ணெய் கிணறுகள் அமைத்தால் காவிரி பாசன பகுதிகள் பாலைவனமாக மாறும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

Update: 2017-08-13 17:40 GMT

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்திலிருந்து எண்ணெய் கிணறுகளை மூடிவிட்டு வெளியேறும் திட்டம் இல்லை என்று ஓ.என்.ஜி.சி. நிறுவனம் அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, ஏற்கனவே எண்ணெய் வளம் கண்டறியப்பட்ட 110 இடங்களில் புதிய எண்ணெய் கிணறுகள் அமைக்கப்படும் என்றும் ஓ.என்.ஜி.சி நிறுவனம் அறிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தி இருக்கிறது.

காவிரி பாசன மாவட்டங்களில் இதுவரை 160 எண்ணெய் கிணறுகளை அமைத்துள்ள ஓ.என்.ஜி.சி நிறுவனம் அவற்றிலிருந்து தினமும் 600 டன் கச்சா எண்ணெயை எடுத்து வருகிறது. மேலும் 110 இடங்களில் எண்ணெய்க் கிணறுகள் அமைக்கப்பட்டால் காவிரி பாசனப் பகுதிகள் பாலைவனமாக மாறுவதை எவராலும் தடுக்க முடியாது.

தமிழ்நாட்டில் மக்கள் நலனை பாதிக்கும் வகையில் எந்தத் திட்டத்தையும் செயல்படுத்த தமிழக அரசு அனுமதிக்காது என்று முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், அமைச்சர்களும் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

இப்போது தமிழகத்தில் 110 இடங்களில் எண்ணெய்க் கிணறுகளை அமைக்கப் போவதாக ஓ.என்.ஜி.சி நிறுவனம் அறிவித்துள்ள நிலையில், அதைத் தடுத்து மக்களை காப்பாற்ற அரசு என்ன செய்யப்போகிறது? என்பதை பினாமி ஆட்சியாளர்கள் மக்களுக்கு விளக்க வேண்டும்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்