தமிழக அரசு அவசரச்சட்டம் இயற்றினால், நீட் தேர்வில் ஓராண்டுக்கு விலக்கு - நிர்மலா சீதாராமன் உறுதி

நீட் தேர்வில் ஓராண்டுக்கு விலக்கு கேட்டால் மத்திய அரசு ஒத்துழைக்க தயார் என மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் உறுதியளித்து உள்ளார்.

Update: 2017-08-13 07:43 GMT
சென்னை, 
 
நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு நடத்தப்பட்டது. நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க கோரி தமிழக சட்டசபையில் 2 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்பு தலுக்காக மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு நடக்கும் நிலையில் மாநில பாடத்தில் பயின்ற மாணவர்களுக்கு 85 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த தமிழக அரசு திட்டமிட்டது. 

இதற்காக அரசாணையும் வெளியிடப்பட்டது. இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு தமிழக அரசு பிறப்பித்த அரசானையை ரத்து செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு 85 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியதை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பை உறுதி செய்தது. மேலும் தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் வகையில் மத்திய அரசு சார்பில் எந்தஒரு சாதகமான பதிலும் வெளியாகும் நிலையில் இல்லாததே தொடர்ந்தது.
 
இதனையடுத்து நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதற்கான அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டு விட்ட நிலையில் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தகுதிப் பட்டியலை தயார் செய்து மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு கலந்தாய்வை தமிழக அரசு நடத்த வாய்ப்பு என தகவல்கள் வெளியாகிய நிலையில் நீட் தேர்வில் ஓராண்டுக்கு விலக்கு கேட்டால் மத்திய அரசு ஒத்துழைக்க தயார் என மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் உறுதியளித்து உள்ளார். 

சென்னை தாம்பரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன், மத்திய அரசு தமிழகத்தை புறக்கணிக்கவில்லை. நீட் தேர்விலிருந்து விலக்கு பெற, முதல்-அமைச்சர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள், பலமுறை மத்திய அரசிடம் ஆலோசித்தனர். நீட் தேர்விலிருந்து அரசு கல்லூரிகளுக்கு மட்டும் இந்த வருடம் விலக்கு அளிக்க தமிழக அரசு கோரினால் மத்திய அரசு ஒத்துழைக்க தயார். ஓராண்டுக்கு விலக்கு கேட்டால் மத்திய அரசு ஒத்துழைக்க தயார், மாநில அரசு அவசரச் சட்டம் கொண்டுவந்தால் ஒத்துழைப்பு அளிக்கப்படும். கிராமப்புற மாணவர்கள் பாதிப்பார்கள் என்பதை விளக்கி தனி அவசர சட்டம் கொண்டுவர வேண்டும். நீட் தேர்வில் நிரந்தர விலக்கு என்பது கிடையாது என கூறிஉள்ளார். 

நீட் தேர்வில் ஓராண்டுக்கு விலக்கு தர ஒத்துழைப்பு அளிக்க தயார் என்பது வரவேற்கத்தக்கது என விஜயபாஸ்கர் கூறிஉள்ளார். 

மேலும் செய்திகள்