5-ம் வகுப்பு வரை படித்து விட்டு சிகிச்சை அளித்தவர்: 17 ஆண்டுகளாக கிளினிக் நடத்திய போலி டாக்டர் கைது

5-ம் வகுப்பு வரை படித்து விட்டு சிகிச்சை அளித்த போலி டாக்டர் பேட்டையில் கைது செய்யப்பட்டார். 17 ஆண்டுகளாக கிளினிக் நடத்தியது அம்பலமானது.

Update: 2017-08-11 22:00 GMT
நெல்லை,

நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, வீடுகளில் கொசுக்கள் உற்பத்தி ஆகும் வகையில் தண்ணீர் தேங்கி நிற்கிறதா? என்பது குறித்து ஆய்வு செய்ய களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, அவர்கள் வீடு, வீடாக சென்று ஆய்வு நடத்தி வருகிறார்கள்.

நெல்லையை அடுத்த பேட்டை ரகுமான்பேட்டை ஆர்.பி.சன்னதி தெருவில் உள்ள ஒரு வீட்டுக்கு களப்பணியாளர்கள் சென்றபோது அந்த வீடு பூட்டிக்கிடந்தது. ஒருநாள் வீடு திறந்திருந்தபோதிலும் அங்கிருந்தவர் அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த களப்பணியாளர்கள் இதுகுறித்து மாநகராட்சி சுகாதார மேற்பார்வையாளர்கள் ஜானகிராம் அந்தோணி, பெருமாள் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அவர்கள் பேட்டை அரசு ஆஸ்பத்திரி டாக்டர் பிர்தவுசியுடன் அந்த வீட்டுக்கு சென்றனர். அவர்களை பார்த்ததும் வீட்டில் இருந்த நபர் சுவரில் ஏறி குதித்து தப்பி ஓட முயன்றார். அவரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

இதையடுத்து அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் மானூர் அருகே உள்ள கானார்பட்டியை சேர்ந்த சந்திரபோஸ் (வயது 50) என்ற ஷேக் முகமது என்பதும், போலி டாக்டர் என்பதும் தெரியவந்தது. 5-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள அவர் சித்த மருத்துவ படிப்பு படித்து உள்ளதாக கூறி மருத்துவம் பார்த்து வந்ததும் தெரியவந்து உள்ளது.

சந்திரபோஸ் பேட்டையில் வீடு எடுத்து தங்கியிருந்து கிளினிக் நடத்தி வந்து உள்ளார். அவர் அலோபதி, ஓமியோபதி, சித்த மருத்துவம் என்று அனைத்துவித மருத்துவமும் செய்து உள்ளார். குறிப்பாக டெங்கு காய்ச்சலுக்கும் மருந்து கொடுத்து உள்ளார். களக்காடு, சேரன்மாதேவி, முக்கூடல் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று சிகிச்சை அளித்து வந்து உள்ளார். கடந்த 17 ஆண்டுகளாக அவர் அங்கு கிளினிக் நடத்தி வந்தது விசாரணையில் தெரியவந்து உள்ளது.

சந்திரபோசை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. 

மேலும் செய்திகள்