குரூப்-1 தேர்வை ரத்து செய்ய கோரி திருநங்கை வழக்கு ஐகோர்ட்டில் விசாரணை தள்ளிவைப்பு

டி.என்.பி.எஸ்.சி. நடத்திய குரூப்-1 முதன்மை தேர்வில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளதாகவும், அந்த தேர்வை ரத்து செய்யவேண்டும் என்றும் ஐகோர்ட்டில் திருநங்கை வழக்கு தொடர்ந்துள்ளார்.

Update: 2017-08-09 21:30 GMT
சென்னை

டி.என்.பி.எஸ்.சி. நடத்திய குரூப்-1 முதன்மை தேர்வில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளதாகவும், அந்த தேர்வை ரத்து செய்யவேண்டும் என்றும் ஐகோர்ட்டில் திருநங்கை வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில், போலீஸ் கமிஷனரை எதிர்மனுதாரராக சேர்க்க வேண்டும் என்று உத்தரவிட்ட ஐகோர்ட்டு, விசாரணையை தள்ளிவைத்துள்ளது.

சென்னை ஐகோர்ட்டில், மதுரையைச் சேர்ந்த திருநங்கை சுவப்னா என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

துணை கலெக்டர், துணை போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட பல பதவிகளுக்கு, குரூப்-1 தேர்வு நடத்துவது குறித்து தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை மாதம் அறிவிப்பு வெளியிட்டது.

இதன்பின்னர் இந்த குரூப்-1 தேர்வு அதே ஆண்டு நவம்பர் மாதம் நடத்தப்பட்டது. இந்த தேர்வில் நான் கலந்துகொண்டு, அதிக மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றேன்.

இதன்பின்னர், இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை 29, 30 மற்றும் 31-ந் தேதிகளில் முதன்மை தேர்வை டி.என்.பி.எஸ்.சி. நடத்தியது.

இந்த தேர்விலும் நான் கலந்துகொண்டு நன்றாக எழுதியிருந்தேன். ஆனால், தேர்வில் நான் தேர்ச்சிப் பெறவில்லை என்று டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் அறிவித்தது. இது எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்தது.

இதையடுத்து முதன்மை தேர்வில் நான் எழுதிய விடைத்தாளின் நகலை கேட்டு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்தேன். ஆனால், அதை தர டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் மறுத்து விட்டது.

இந்த நிலையில், குரூப்-1 தேர்வில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளதாக தனியார் தொலைக்காட்சி ஒன்றில், ஆதாரங்களுடன் செய்திகள் வெளியாகியது. அதில், குரூப்-1 தேர்வில் பங்கேற்றவர்களின் உண்மையான விடைத்தாள்களை அந்த தொலைக்காட்சி நிர்வாகம் வெளியிட்டது.

தேர்வு முடிந்த பின்னர், எழுதப்படாத அல்லது பூர்த்திச் செய்யப்படாத விடைத்தாள்களை, தாங்கள் விரும்பும், தேர்வில் பங்கேற்ற நபர்களுக்கு கொடுத்து, அதில் அவர்களை விடை எழுதச் சொல்லி, அதன் மூலம் அவர்களுக்கு மதிப்பெண் வழங்கி, தேர்ச்சி பெற்றவர்களாக அறிவித்துள்ளனர் என்றும் செய்தி வெளியாகியுள்ளது.

எனவே, குரூப்-1 தேர்வில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது. அதனால், குரூப்-1 தேர்வு எழுதியவர்களின் உண்மையான விடைத்தாள்களை அந்த தொலைக்காட்சி நிறுவனத்திடம் இருந்து பெற்று, இந்த ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிடவேண்டும்.

தேர்வு ரத்து

குரூப்-1 முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, நேர்முகத் தேர்வு நடத்த டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அதனால், இந்த தேர்முகத் தேர்வுக்கு தடை விதிக்கவேண்டும். கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த குரூப்-1 முதன்மை தேர்வை ரத்து செய்யவேண்டும். இந்த தேர்வை வெளிப்படையான முறையில் மீண்டும் நடத்த டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும்

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, டி.என்.பி.எஸ்.சி. சார்பில் ஆஜரான வக்கீல் நிறைமதி, ‘தொலைக்காட்சியில் வெளியான விடைத்தாள்கள் உண்மையானது இல்லை. அவை சித்தரிக்கப்பட்டவை‘ என்று கூறினார்.

மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் எம்.புருஷோத்தமன், ‘தொலைக்காட்சியில் வெளியான விடைத்தாள்கள் அனைத்தும் உண்மையானது. டி.என்.பி.எஸ்.சி. கட்டுப்பாட்டின் கீழ் இருக்கவேண்டிய விடைத்தாள்கள் எப்படி வெளியில் சென்றது? இதுகுறித்து விசாரிக்க வேண்டும். இதில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது’ என்றார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, ‘இந்த வழக்கு விசாரணையை வருகிற 16-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறேன். அதற்குள் இந்த வழக்கில், சென்னை போலீஸ் கமிஷனர் மற்றும் தனியார் தொலைக்காட்சியை எதிர்மனுதாரர்களாக, மனுதாரர் சேர்க்கவேண்டும்’ என்று உத்தரவிட்டார். 

மேலும் செய்திகள்