சிவாஜி கணேசன் சிலை நள்ளிரவில் அகற்றம் சிவாஜி ரசிகர்கள் கவலை

சென்னை மெரினாவில் இருந்த சிவாஜி கணேசன் சிலை நள்ளிரவில் அகற்றப்பட்டது.

Update: 2017-08-03 22:15 GMT
சென்னை,

தமிழ் திரை உலகில் தனது நடிப்பு திறமையால் முத்திரை பதித்தவர் நடிகர் சிவாஜி கணேசன். ரசிகர்களால் ‘நடிகர் திலகம்’ என்று போற்றப்பட்டவர். உடல் நலக்குறைவால் அவர் கடந்த 2001-ம் ஆண்டு ஜூலை 21-ந்தேதி மரணம் அடைந்தார்.

திரை உலகில் சிவாஜி கணேசன் ஆற்றிய கலைச்சேவையை கவுரவிக்கும்விதமாக சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் 8 அடி உயரத்தில் அவருடைய முழு உருவ வெண்கல சிலை கடந்த 2006-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் நிறுவப்பட்டது.

அந்த சிலையை அப்போது முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி கடந்த 2006-ம் ஆண்டு ஜூலை 12-ந்தேதி திறந்து வைத்தார். சிவாஜிகணேசன் குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சிவாஜி கணேசன் பிறந்தநாள், நினைவு நாளின் போது அவருடைய சிலைக்கு மரியாதை செலுத்துவதை வழக்கமாக கொண்டனர்.

இதற்கிடையே சிலை நிறுவப்பட்டதற்கு எதிர்ப்புகளும் கிளம்பின. சென்னையைச் சேர்ந்த காந்தியவாதி சீனிவாசன் என்பவர், ‘காந்தி சிலையை மறைக்கும் விதமாக சிவாஜி கணேசன் சிலை நிறுவப்பட்டுள்ளது. இது காந்தி சிலையின் முக்கியத்துவத்தை குறைக்கும் விதமாக உள்ளது. எனவே சிவாஜி கணேசன் சிலையை அகற்றிவிட்டு வேறு இடத்தில் நிறுவ வேண்டும்’ என்று கடந்த 2006-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நிலுவையில் இருந்தபோதே சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த நாகராஜன் என்பவர், ‘மெரினா கடற்கரை காமராஜர் சாலை, டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சாலை இணையும் மைய பகுதியில் நிறுவப்பட்டுள்ள சிவாஜி கணேசன் சிலையால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே அந்த சிலையை அகற்ற வேண்டும்’ என்று ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

பல ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் கடந்த 2014-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், மெரினாவில் உள்ள சிவாஜி கணேசன் சிலையை அகற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனை அ.தி.மு.க. அரசு ஏற்றுக்கொண்டாலும், சிலையை அகற்ற கால அவகாசம் கேட்கப்பட்டது.

இந்தநிலையில் தமிழக சட்டசபையில் 110 விதியின் கீழ் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 26-ந்தேதி ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில், ‘அடையார் சத்யா ஸ்டுடியோ அருகே சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும்’ என்று அறிவித்தார்.

சிவாஜி கணேசன் மணிமண்டபம் கட்டும் பணி நிறைவடைந்தவுடன் மெரினாவில் உள்ள அவருடைய சிலை அகற்றப்பட்டு இங்கு நிறுவப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

அதன்படி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கிய சிவாஜிகணேசன் மணிமண்டபம் கட்டும் பணி தற்போது நிறைவடைந்தது. இதையடுத்து மெரினாவில் உள்ள சிவாஜி கணேசன் சிலை எப்போது வேண்டும் என்றாலும் அகற்றப்படலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

மெரினாவில் உள்ள சிவாஜி கணேசன் சிலையை கடற்கரை சாலையில் உள்ள காமராஜர், காந்தி சிலைகளுக்கு நடுவில் நிறுவ வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சிவாஜி சமூக நலப்பேரவை தலைவர் சந்திரசேகரன் மற்றும் சிவாஜி கணேசன் ரசிகர்கள் வலியுறுத்தி வந்தனர். ஆனால் இந்த கோரிக்கையை தமிழக அரசு ஏற்க மறுத்து விட்டது.

சிவாஜி கணேசன் சிலையை பகலில் அகற்றினால் போக்குவரத்துக்கு இடையூறாக அமைந்துவிடும் என்பதால், நள்ளிரவில் அகற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் திட்டமிட்டு இருந்தனர். அதன்படி நேற்றுமுன்தினம் நள்ளிரவு 12.30 மணிக்கு மெரினா கடற்கரை சாலையில் போக்குவரத்து ஓய்ந்த பின்னர் சிவாஜி கணேசன் சிலையை அகற்றும் பணி தொடங்கியது.

முதலில் சிவாஜிகணேசன் சிலை துணியால் மூடப்பட்டது. பின்னர் ‘டைமண்ட் கட்டிங்’ எந்திரம் மூலம் சுமார் 20-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் சிலையை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அதிகாலை 4.15 மணியளவில் சிவாஜிகணேசன் சிலை பீடத்தில் இருந்து பிரித்து எடுக்கப்பட்டது. பின்னர் கிரேன் மூலம் லாரியில் ஏற்றப்பட்டது.

அடையாரில் உள்ள மணிமண்டபத்துக்கு காலை 5.15 மணிக்கு சிலை கொண்டு வரப்பட்டது. பின்னர் அங்கு அமைக்கப்பட்டுள்ள பீடத்தில் சிலை நிறுவப்பட்டது. சிவாஜி கணேசன் சிலை அகற்றும்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

மெரினா கடற்கரை சாலை வழியாக அன்றாடம் பயணிக்கும் வாகன ஓட்டிகள் நேற்று சிவாஜி சிலை மாயமாகி இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இடுப்பில் கை வைத்தபடி கம்பீர தோற்றத்துடன் காட்சி அளித்த சிவாஜி சிலையை அகற்றிய தகவல் அறிந்து சிவாஜி ரசிகர்கள் கவலை அடைந்தனர்.

எனினும் சிவாஜி கணேசன் மணிமண்டப பணிகள் முடிவடைந்து, அங்கு அவருடைய சிலையும் நிறுவப்பட்டு விட்டதால் மணிமண்டப திறப்பு விழா எப்போது நடைபெறும் என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

சிவாஜி மணிமண்டபம் வருகிற 10 அல்லது 11-ந்தேதி திறக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

மேலும் செய்திகள்