ஓய்வூதியதாரர்கள் ஜீவன் பிரமாண பத்திரம் பதிவு செய்ய மீண்டும் வாய்ப்பு

ஓய்வூதியதாரர்கள் ஜீவன் பிரமாண பத்திரம் பதிவு செய்ய மீண்டும் ஒரு வாய்ப்பாக தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அலுவலகங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Update: 2017-07-12 21:45 GMT
சென்னை,

ஓய்வூதியம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஓய்வூதியதாரர்கள் ஜீவன் பிரமாண பத்திரம் பதிவு செய்ய மீண்டும் ஒரு வாய்ப்பாக தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அலுவலகங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜீவன் பிரமாண பத்திரம்

ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தில் முறைகேடுகளை தடுக்க ஆதார் எண் கட்டாயம் என மத்திய அரசு ஜனவரி மாதம் உத்தரவிட்டது. மேலும் ஓய்வூதியதாரர்கள் ஆண்டுதோறும் தங்களது ஜீவன் பிரமாண பத்திரம் என்ற டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழையும் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதற்காக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையர் அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு கவுண்ட்டர்கள் மூலம் ஓய்வூதியம் பெறுபவர்களின் வருங்கால வைப்பு கணக்கில், அவர்களின் ஆதார் எண் இணைக்கப்படுவதுடன், ஜீவன் பிரமான பத்திரம் பதிவு செய்யும் பணியும் நடந்து வருகிறது.

ஓய்வூதியம் நிறுத்தம்

இதுகுறித்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையத்தின் முதன்மை ஆணையர் சலில் சங்கர் கூறியதாவது:-

ஓய்வூதியம் பெறுவதில் முறைகேடுகள் நடந்ததால் மத்திய அரசு ஆதார் எண், ஜீவன் பிரமாண பத்திரத்தை பதிவு செய்ய ஓய்வூதியதாரர்களுக்கு உத்தரவிட்டது. இதற்காக மார்ச் 31-ந் தேதி வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டது. பின்னர் மே 31-ந் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அதன் பிறகும் அவற்றை தாக்கல் செய்யாதவர்களுக்கு ஜூன் 1-ந் தேதியில் இருந்து ஓய்வூதியம் நிறுத்தப்பட்டது.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகங்கள் சென்னை ராயப்பேட்டை, தாம்பரம், அம்பத்தூர், கோவை, சேலம், மதுரை, வேலூர், நெல்லை, நாகர்கோவில், திருச்சி மற்றும் புதுச்சேரி என 11 இடங்களில் செயல்படுகின்றன. இதில் 6 லட்சத்து 73 ஆயிரத்து 24 பேர் உறுப்பினராக உள்ளனர். இவர்களில் 4 லட்சத்து 68 ஆயிரத்து 176 பேர் தங்களுடைய ஆதார் எண்ணை அளித்திருப்பதுடன், ஜீவன் பிரமாண பத்திரத்தை பதிவு செய்து உள்ளனர். மீதம் உள்ள 2 லட்சத்து 4 ஆயிரத்து 848 பேர் பதிவு செய்யவில்லை.

சென்னையில் 54 சதவீதம்

சென்னை மண்டலத்தில் மட்டும் 76 ஆயிரத்து 941 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் 41 ஆயிரத்து 257 பேர் ஆதார் எண்ணை அளித்திருப்பதுடன், ஜீவன் பிரமாண பத்திரம் பதிவு செய்துள்ளனர். இது 53.62 சதவீதமாகும்.

ஜீவன் பிரமாண பத்திரம் பதிவு செய்யாத உறுப்பினர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகங்களில் சிறப்பு கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டு இலவசமாக பதிவு செய்யப்பட்டு வருகிறது. மேலும் இ-சேவை மையத்திலும் ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு அட்டை, ஓய்வூதியம் வழங்குவதற்காக வழங்கப்பட்ட உத்தரவு நகல் ஆகியவற்றை கொண்டு சென்று பதிவு செய்யலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்