தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று மிதமான மழை பெய்யும்

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2017-07-08 23:15 GMT

சென்னை,

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் நிருபர்களுக்கு நேற்று பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:–ஆந்திர மாநிலம் கடற்கரையை ஒட்டிய பகுதியில் உள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்ட மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 24 மணி நேரத்தில்(நேற்று முன்தினம்) தமிழகத்தில் மழை பெய்து இருக்கிறது. அந்த மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில்(இன்று) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும்.

மேகக்கூட்டங்கள் அதிகமாகி தெற்கில் இருந்து காற்றை உள் இழுக்கும் பட்சத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் இன்னும் ஒரு வாரத்துக்கு ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. சென்னையை பொறுத்தவரையில் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும்.

கடந்த ஜூன் 1–ந்தேதி முதல் ஜூலை 8–ந்தேதி(நேற்று) வரை தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை 6.2 செ.மீ. பெய்திருக்க வேண்டும். நமக்கு இதுவரை 5.6 செ.மீ. மழை தான் பெய்து இருக்கிறது. இது இயல்பான அளவு தான். தென்மேற்கு பருவமழை காலமான ஜூன் முதல் செப்டம்பர் வரை தமிழகத்தில் 32 செ.மீ. மழை பெய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.  இவ்வாறு அவர் கூறினார்.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பெய்த மழை அளவு வருமாறு:–

அதிராமபட்டினம், சின்னக்கல்லாறு ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ., திருத்துறைப்பூண்டி, முதுகுளத்தூர், வால்பாறை, வேதாரண்யம், கந்தர்வக்கோட்டை ஆகிய இடங்களில் தலா 2 செ.மீ., மாயனூர், கொடவாசல், பாண்டவையாறு தலை, பட்டுக்கோட்டை, வல்லம், மடுக்கூர், தேவலா ஆகிய இடங்களில் தலா 1 செ.மீ. மழை பெய்துள்ளது.

மேலும் செய்திகள்