எனது குரலைப்போல் டப்பிங் செய்து வெளியிட்டுள்ளனர் சரவணன் எம்.எல்.ஏ. மறுப்பு

எனது குரலைப்போல் டப்பிங் செய்து வெளியிட்டுள்ளனர் சரவணன் எம்.எல்.ஏ. மறுப்பு தெரிவித்து உள்ளார்.

Update: 2017-06-13 04:50 GMT

கூவத்தூர் ரிசார்ட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சசிகலா தரப்பு எம்எல்ஏ- க்கள் விலை கொடுத்து வாங்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டைம்ஸ் நவ்- மூன் டிவி இணைந்து நடத்திய ஸ்டிங் ஆப்ரேஷனில் இத்தகவல்கள் வெளிவந்தன.

மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ-வான சரவணன், பணத்தை வாரி இறைத்ததை ஒப்புக் கொண்டார்.

ஆனால் தற்போது நான் அப்படியெல்லாம் பேசவில்லை, யாரோ டப்பிங் கொடுத்து விட்டனர் என பல்டி அளித்துள்ளார்.

ரகசிய வீடியோ குறித்து சரவணன் எம்.எல்.ஏ.வை செல்போனில் தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் கூறியதாவது:–

கூவத்தூருக்கு என்னைப் போன்று அனைத்து எம்.எல்.ஏ.க்களையும் எந்த காரணமும் சொல்லாமல் அழைத்துச் சென்றார்கள். அங்கு சென்றபின் நடந்த வி‌ஷயங்களை அறிந்தேன். அதற்குள் என்னை தொடர்பு கொண்ட தொகுதி மக்கள், நீங்கள் பன்னீர்செல்வம் அணிக்கு செல்ல வேண்டும் என்று கூறினர். அந்த அடிப்படையில் பன்னீர் செல்வம் அணியில் என்னை இணைத்துக்கொண்டேன். தொடர்ந்து அங்கிருந்து மக்கள் பணியாற்றியும் வருகிறேன்.
பணம் வாங்கவில்லை

இந்த சூழ்நிலையில் 3 மாதத்திற்கு முன்பு, எடுக்கப்பட்டதாக கூறப்படும் ஒரு வீடியோவை அப்போதே வெளியிடாமல் தற்போது வெளியிடுவது ஏன்? அதில் கூறப்பட்டுள்ள எந்த கருத்தையும் நான் சொல்லவில்லை. எனது குரலைப்போல் டப்பிங் செய்து வெளியிட்டுள்ளனர். கூவத்தூரில் எனக்கு பணம் தருவதாக யாரும் சொல்லவில்லை. நானும் யாரிடமும் பணம் வாங்கவில்லை.

கடந்த 5 தினங்களுக்கு முன்பு கூட பன்னீர்செல்வம் கலந்துகொண்டு பேசிய கூட்டத்தில் நானும் கலந்துகொண்டேன். அப்போது நான், பன்னீர்செல்வம் அணியில் இருந்து விலகி விட்டதாக வாட்ஸ்–அப்பில் தகவல் பரவியது. இது போன்ற பொய்யான தகவலை ஏன் பரப்புகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. நான் தொடர்ந்து பன்னீர்செல்வத்துடன் இருப்பேன். இல்லாவிட்டால் எனது பதவியை ராஜினாமா செய்துவிடுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்