பத்திரப்பதிவு கட்டணத்தை குறைக்க வேண்டும்; தமிழக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்

தமிழகத்தில் பத்திரப்பதிவு கட்டணத்தை ஒரு சதவீதமாக குறைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2017-06-11 16:45 GMT

சென்னை,

அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) அணி பொருளாளரும், முன்னாள் முதல்–அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

4 சதவீதம் உயர்வு

2 தினங்களுக்கு முன்பு நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு, வீடுகள் மற்றும் மனைகளுக்கான வழிகாட்டி மதிப்பை 33 சதவீதம் குறைப்பதாக தமிழக அரசு அறிக்கை வெளியிட்டிருந்தது. அதனால், பத்திரப்பதிவு செலவு குறையும் என்றும் கூறப்பட்டது.

அதைப்படித்து மகிழ்ச்சி அடைவதற்குள், பின்னாலேயே அதிர்ச்சியான ஒரு அறிவிப்பும் இருந்தது. ஒரு சதவீதமாக இருந்த பதிவு கட்டணம் 4 சதவீதமாக உயர்த்தப்பட்டு இருக்கிறது என்பது தான் அந்த அதிர்ச்சி.

மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்

வழிகாட்டி மதிப்பு குறைக்கப்பட்டதால், குறையும் என எதிர்பார்க்கப்பட்ட செலவு, பத்திரப்பதிவு கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பதால் அதிகரித்து விடும் அபாயத்தை மக்கள் கவனிக்கமாட்டார்கள் என்று ஆட்சியாளர்கள் நினைத்துவிட்டார்கள் போலிருக்கிறது.

‘பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிவிட்டது போல’ என்று ஒரு பழமொழி இருக்கிறது. ஆனால், இவர்கள் தொட்டிலை ஆட்டிவிட்டு, பிள்ளையை கிள்ளிவிட்டது போல நடந்து கொண்டிருக்கிறார்கள்.

இன்னொரு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால், குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்துவிட்டு, நகையை அபகரித்த கதை போல இந்த அறிவிப்பு இருக்கிறது. இந்த அரசுதான் தெளிவில்லாமல் குழப்பத்தில் தள்ளாடுகிறது. ஆனால் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்.

குறைக்க வேண்டும்

கொடுப்பது போல கொடுத்து, தட்டிப்பறிக்கிறது தமிழக அரசு என்ற அவப்பெயர் ஏற்பட்டுவிட வேண்டாம். இது ஜெயலலிதாவின் அயராத உழைப்பினால், அளவுகடந்த செல்வாக்கினால், அனைத்து தரப்பினரும் பயனடையும் வகையில் அவர் போட்ட சட்டங்களால், வழங்கிய நலத்திட்டங்களால் உருவான பொற்கால ஆட்சி.

‘எல்லா புகழும் இறைவனுக்கே’ என்பது போல ‘எல்லா புகழும் ஜெயலலிதாவுக்கே’ என்பது தான் உண்மை. ஜெயலலிதாவின் புகழுக்கு பெருமை சேர்க்கும் விதமாக நடப்பதுதான் உண்மையான ‘ஜெயலலிதா ஆட்சி’. அதை நினைவு கூர்ந்து, மக்களின் நலனுக்காகவே முடிவுகள் எடுக்க வேண்டும்.

முத்திரைத்தாள் கட்டணத்தையும், மதிப்புக்கூட்டு வரியையும் மத்திய அரசு நிர்ணயித்தபடி பின்பற்ற வேண்டும். பதிவு கட்டணத்தை முன்பு போலவே, ஒரு சதவீதமாக குறைக்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்