நிபந்தனைகள் ஏற்கப்பட்டால்தான் இணைப்பு பேச்சுவார்த்தை கே.பி.முனுசாமி பேட்டி

நிபந்தனைகள் ஏற்கப்பட்டால்தான், எடப்பாடி பழனிசாமி அணியுடன் இணைப்பு தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று கே.பி.முனுசாமி தெரிவித்தார்.

Update: 2017-06-09 21:45 GMT
சென்னை,

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணி (அ.தி.மு.க. அம்மா), முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணி (அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா) என அ.தி.மு.க. 2 ஆக பிளவுப்பட்டு உள்ளது. இந்த 2 அணிகளையும் இணைப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி அணியில் இருந்த முன்னாள் அமைச்சர் எம்.பரஞ்சோதி தலைமையில், திருச்சி மாவட்டத்தை சேர்ந்த அ.தி.மு.க. இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை துணை செயலாளர் டாக்டர் கவிதா கிருஷ்ணமூர்த்தி உள்பட நிர்வாகிகள், கட்சியினர் என சுமார் 500 பேர், ஓ.பன்னீர்செல்வத்தை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவருடைய இல்லத்தில் சந்தித்து, அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா கட்சியில் இணைந்தனர். இதேபோல விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.லட்சுமணன் எம்.பி. ஏற்பாட்டின் பேரில் 50 வக்கீல் களும், ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து கட்சியில் இணைந்தனர்.

இந்த நிகழ்வின்போது, இ.மதுசூதனன், முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், கே.பாண்டியராஜன், டாக்டர் மைத்ரேயன் எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ. ஜே.சி.டி.பிரபாகர் உள்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

முன்னதாக ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

செவி சாய்க்கவில்லை

இதையடுத்து முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சசிகலா குடும்பத்தை சேர்ந்தவர்களை கட்சியை விட்டு நீக்கவேண்டும், ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிடவேண்டும் என்று நாங்கள் முன்வைத்த 2 நிபந்தனைகளுக்கும், இன்றுவரை எடப்பாடி பழனிசாமி செவி சாய்க்கவில்லை.

எங்களை திருப்திப்படுத்தவோ அல்லது அ.தி.மு.க. தொண்டர்களை ஏமாற்றவோ சசிகலா குடும்பத்தை ஒதுக்கிவைக்கிறோம் என்று கூறினார்கள். சிறையில் இருந்து வெளியே வந்த டி.டி.வி.தினகரன், சசிகலாவை சந்தித்து விட்டு, அரசியலில் தீவிரமாக ஈடுபட இருக்கிறேன். நான் தான் துணை பொதுச்செயலாளர், 60 நாட்கள் அவர்களுக்கு அவகாசம் கொடுக்கிறேன். 2 அணிகளும் இணையாவிட்டால் களத்தில் இறங்குவேன் என்று கூறியிருக்கிறார்.

நிபந்தனைகளை ஏற்றால் பேச்சுவார்த்தை

இதற்கு அமைச்சர் ஜெயக்குமார், தினகரனை ஒதுக்கி வைத்துவிட்டோம். ஒரு கிளைச்செயலாளர் கூட அவருடன் தொடர்பு கொள்ள மாட்டார்கள் என்றார். அவர் சொன்ன மறுநாளில் இருந்து தினகரனை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து ஆதரவு அளித்து வருகின்றனர். அவரை சந்தித்த எம்.எல்.ஏ.க்கள் மீது எடப்பாடி பழனிசாமி அணியினர், கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இல்லையென்றால், சசிகலா குடும்பத்தை சேர்ந்த தினகரன், திவாகரன் ஆகியோர்தான் எடப்பாடி அணியை இயக்கி வருகிறார்கள் என்று சந்தேகிப்பதை தவிர்க்க முடியாததாகி விடும்.

எடப்பாடி பழனிசாமி அணியினருடன் மறைமுகமாக பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாக வரும் தகவல்கள் உண்மை இல்லை. எங்கள் நிபந்தனைகள் ஏற்கப்பட்டால்தான், பேச்சுவார்த்தை நடத்துவோம்.

பா.ஜனதா அழுத்தம் தரவில்லை

அ.தி.மு.க. முன்னணி தலைவர்கள் எல்லோரும் சசிகலாவால் உருவாக்கப்பட்டவர்கள்தான். எனவே அவர்களும் சசிகலா தலைமையை ஏற்கவேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறியிருக்கிறார். எங்கள் அணியில் உள்ள தலைவர்கள் எல்லோரும் எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து அரசியலில் இருக்கிறவர்கள். ராஜேந்திரபாலாஜி வேண்டுமானால், குறுக்கு வழியில் சசிகலாவால் பதவிக்கு வந்திருக்கலாம். சசிகலா குடும்பத்தினரின் தலையீடு இருக்கும் வரை, எடப்பாடி பழனிசாமி அரசின் செயல்பாடு சரியாக இருக்காது.

ஜனாதிபதி தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை பெற்று, எங்கள் அணியில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் யாருக்கு வாக்களிப்பது என்று முடிவெடுப்பார்கள்.

அ.தி.மு.க.வின் 2 அணிகளும் இணையவேண்டும் என்று பா.ஜனதா அழுத்தம் கொடுக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்