சென்னை தியாகராயநகரில் உள்ள தமிழக பா.ஜ.க. அலுவலகத்திற்கு வெடி மருந்துடன் மிரட்டல் கடிதம்

சென்னை தியாகராயநகரில் உள்ள தமிழக பா.ஜ.க. அலுவலகத்திற்கு வெடிமருந்துடன் மிரட்டல் கடிதம் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2017-06-09 23:00 GMT
சென்னை,

மோப்ப நாயுடன் வந்த போலீசார் கட்சி அலுவலகம் முழுவதும் சோதனை நடத்தினர்.

மர்ம கடிதம்

சென்னை தியாகராயநகரில் உள்ள தமிழக பா.ஜ.க. அலுவலகமான கமலாலயத்திற்கு தினமும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் இருந்து கடிதங்கள் வருவது வழக்கம். நேற்று முன்தினமும் இதுபோல் ஏராளமான கடிதங்கள் வந்து இருந்தன.

அவற்றை நிர்வாகிகள் தனித்தனியாக பிரித்து வைத்துக்கொண்டு இருந்த போது தமிழிசை சவுந்தரராஜன் பெயருக்கு வந்த ஒரு கடிதம் மட்டும் வித்தியாசமாகவும், ஒருவித ரசாயன வாசனை கொண்டதாகவும் இருந்தது. மேலும் இந்த கடிதத்தில் இருந்த அனுப்புனர் முகவரியும், சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் இருந்தது. அந்த கடிதம் வெடிகுண்டு பார்சலாக இருக்கும் என்று கருதப்பட்டது.

எனவே இந்த கடிதத்தை நிர்வாகிகள் பிரிக்கவில்லை. இது குறித்து கட்சியின் மேலிட தலைவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

வெடிமருந்து

இது தொடர்பாக நேற்று மாலை கட்சி அலுவலக நிர்வாகிகள் இந்த மர்ம கடிதம் குறித்து மாம்பலம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.

அதனைத்தொடர்ந்து 10-க்கும் மேற்பட்ட போலீசார், மோப்ப நாயுடன் கமலாலயத்திற்கு விரைந்து வந்தனர்.

பின்னர் அவர்கள் மர்ம நபர் அனுப்பிஇருந்த மிரட்டல் கடிதத்தை பிரித்தனர். அப்போது அந்த கடிதத்தில் வெடிமருந்து இருந்தது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், அதில் இருந்த வெடி மருந்துகளை முதலில் பத்திரமாக வெளியில் கொட்டினர். அதன்பிறகு அந்த கடிதம் எந்த முகவரியில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது என்பதை போலீசார் ஆராய்ந்தனர். அந்த மிரட்டல் கடிதத்தின் அனுப்புனர் பகுதியில், வசூது, சிராஜ் மஹால், எண்14, வேனல்ஸ் ரோடு, இம்பீரியல் காம்ப்ளக்ஸ், சென்னை 600008 என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

வெடிகுண்டு கடிதம் வந்ததையொட்டி பா.ஜனதா அலுவலகம் முழுவதும் போலீசார் சோதனை நடத்தினர்.

உண்மையான முகவரியா?

இதற்கிடையே, பா.ஜ.க. அலுவலகத்திற்கு வெடிமருந்துடன் மிரட்டல் கடிதம் வந்திருப்பதை அறிந்ததும் ஏராளமான தொண்டர்கள் கமலாலயத்தில் குவிந்து விட்டனர். அவர்கள் வெடிமருந்துடன் மிரட்டல் கடிதத்தை அனுப்பியவரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாரிடம் வலியுறுத்தினர்.

அந்த மிரட்டல் கடிதத்தில் என்ன கூறப்பட்டுள்ளது என்பது குறித்து போலீசார் தெரிவிக்கவில்லை. அந்த கடிதத்தில் உள்ள முகவரி எங்கு உள்ளது? என்பது குறித்தும், அந்த முகவரி உண்மையானது தானா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்த தொடங்கி இருக்கிறார்கள்.

ஒரே நபரா?

கடந்த சில நாட்களுக்கு முன்பு கட்சியின் மாநிலத்தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு மர்ம நபர் ஒருவர் செல்போன் மூலம் கொலை மிரட்டல் விடுத்தார். அவரது வீட்டுக்கு வெடி மருந்து பார்சலும் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது.

இது தொடர்பாக விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் 2 புகார்கள் கொடுக்கப்பட்டிருந்த சூழ்நிலையில், கட்சி அலுவலகத்திற்கும் வெடிமருந்துடன் மிரட்டல் கடிதம் வந்திருப்பது அக்கட்சியினர் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பா.ஜ.க. அரசின் அறிவிப்புகளை கண்டித்து இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளதா? அல்லது தமிழக பா.ஜ.க.வின் நடவடிக்கையை கண்டித்து அனுப்பப்பட்டதா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனுக்கும், கட்சி அலுவலகத்திற்கும் மிரட்டல் விடுத்தவர் ஒரே நபர் தானா? என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது. போலீஸ் துணை கமிஷனர் சரவணன் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது.

அஞ்ச மாட்டோம்

கட்சி அலுவலகத்திற்கு வந்த மிரட்டல் கடிதம் குறித்து பா.ஜ.க. நிர்வாகி ஒருவர் கூறும்போது, ‘மத்திய மந்திரிகள் வெங்கையாநாயுடு, நிதின்கட்கரி ஆகியோர் தமிழகம் வந்துள்ள நிலையில் பா.ஜ.க. அலுவலகத்திற்கு வெடிமருந்து மிரட்டல் கடிதம் வந்திருப்பது எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது. மாநிலத்தலைவருக்கும் செல்போன் மூலம் மர்ம நபர் மிரட்டல் விடுத்து இருக்கிறார். ஏன் இவ்வாறு செய்கிறார்கள் என்று எங்களுக்கு தெரியவில்லை. நாங்கள் எதற்கும் அஞ்ச மாட்டோம். கோழைகள் தான் இது போன்று செய்வார்கள்’ என்றார். 

மேலும் செய்திகள்