பெண் டாக்டர் உள்பட 3 பேர் கொலை: 2 கொள்ளையர்களுக்கு தூக்கு தண்டனை; நாமக்கல் கோர்ட்டு தீர்ப்பு

பெண் டாக்டர் உள்பட 3 பேரை கொலை செய்து, நகைகளை கொள்ளை அடித்த வழக்கில் கொள்ளையர்கள் 2 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கி நாமக்கல் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

Update: 2017-06-05 21:03 GMT

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள தோப்பூரை சேர்ந்தவர் சிந்து (வயது 32). டாக்டரான இவர், புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வந்தார்.

சிந்து, தனது குழந்தையை நாமக்கல்லில் உள்ள பள்ளியில் சேர்க்க கடந்த 2011-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நாமக்கல்லில் உள்ள தனது சித்தி உமாதேவி வீட்டிற்கு வந்தார். அக்டோபர் மாதம் 13-ந் தேதி சிந்துவின் மகள் பள்ளிக்கு சென்றுவிட்டாள். உமாதேவி, தனது கணவர் ஆஸ்பத்திரிக்கு சென்றுவிட்டார்.

சிந்து, அவரது தாயார் சத்தியவதி (50), பாட்டி விசாலாட்சி (68) ஆகியோர் வீட்டில் இருந்தனர். அப்போது பட்டப்பகலில் 3 பேர் கொண்ட கொள்ளை கும்பல் வீட்டிற்குள் புகுந்து, 3 பேரையும் கழுத்தை அறுத்து கொலை செய்து, வீட்டில் இருந்த 28 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றது.

3 பேர் கைது

இந்த சம்பவம் தொடர்பாக 3 மாதங்களுக்கு பின்னர் சென்னையைச் சேர்ந்த சந்தானம் (28), வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்த காமராஜ் (33), நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை சேர்ந்த இளங்கோ (27) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை நாமக்கல் மாவட்ட கூடுதல் கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் கரூர் மாவட்டம் வெண்ணெய்மலையில் ஒரு சிறுமி மற்றும் 2 பெண்களை கொலை செய்து நகை, பணம் கொள்ளையடித்த வழக்கில் தொடர்புடைய இவர்கள் 3 பேருக்கும் கடந்த 2014-ம் ஆண்டு 5 ஆயுள் தண்டனை விதித்து அம்மாவட்ட கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. இதையடுத்து 3 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் முக்கிய குற்றவாளியான சந்தானம் கடந்த 2014-ம் ஆண்டு சிறையில் இருக்கும்போதே இறந்து விட்டார்.

தூக்கு தண்டனை

இதற்கிடையே பெண் டாக்டர் உள்பட 3 பேர் கொல்லப்பட்ட வழக்கின் தீர்ப்பை நேற்று நாமக்கல் கோர்ட்டில் நீதிபதி சம்பத்குமார் அறிவித்தார்.

அப்போது அவர், இருவருக்கும் தூக்கு தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு கூறினார். இதுதவிர ஆயுள்தண்டனை மற்றும் சொத்தை அபகரித்தல் பிரிவுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார்.

மேலும் செய்திகள்