தி.மு.க. நடத்தும் அனைத்து கட்சி கூட்டம், ஆட்சி மாற்றத்துக்கான கூட்டம் அல்ல மு.க.ஸ்டாலின் பேட்டி

விவசாயிகளின் நல்வாழ்வை அடிப்படையாக வைத்தே தி.மு.க. அனைத்து கட்சி கூட்டத்தை நடத்துகிறது என்றும், ஆட்சி மாற்றத்துக்கான கூட்டம் இது அல்ல என்றும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.;

Update:2017-04-15 05:15 IST
சென்னை, 

தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு மு.க.ஸ்டாலின் அளித்த பதில்களும் வருமாறு:–

மகிழ்ச்சி 

கேள்வி:– தி.மு.க. நடத்தும் அனைத்து கட்சி கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் பங்கேற்கும் என முத்தரசன் தெரிவித்து உள்ளாரே?.

பதில்:– மகிழ்ச்சி. நன்றி.

கேள்வி:– இதற்கு முன்பு விவசாயிகளின் பிரச்சினைகளுக்காக நீங்கள் நடத்திய அனைத்து கட்சி கூட்டத்தில் உங்கள் கூட்டணியில் இருந்த கட்சிகள் மட்டுமே பங்கேற்றனர். இப்போது கூட்டணியில் இல்லாத கட்சிகளும் பங்கேற்பதை எப்படி பார்க்கின்றீர்கள்?.

பதில்:– கடந்த முறை நடந்த கூட்டத்தின் போதும் அனைவருக்கும் அழைப்பு விடுத்திருந்தோம். இப்போது விவசாயிகளின் நிலை அப்போது இருந்ததைவிட இன்னும் மோசமாகியுள்ளது. இந்த சூழ்நிலையில் தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள அ.தி.மு.க., பா.ஜ.க. தவிர மீதமுள்ள எல்லா கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளோம். மத்தியிலும், மாநிலத்திலும் ஆளும் கட்சிகளாக இருக்கக்கூடிய கட்சிகளுக்கு ஏன் அழைப்பு விடுக்கவில்லை என்றால், அவர்கள் தான் இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வேண்டியவர்கள். ஆனால், அவர்கள் அதை செய்யவில்லை என்பதால், அவர்களை கண்டித்து, அதையொட்டி, எல்லா கட்சிகளுடனும் கலந்துபேசி தீர்மானங்களை இயற்ற இருக்கிறோம். அதனால் தான் அவர்களுக்கு அழைப்பு அனுப்பவில்லை.

ஆட்சி மாற்றத்துக்கான கூட்டம் அல்ல 

கேள்வி:– இந்த கூட்டத்தினால் ஆட்சி மாற்றம் ஏற்படுமா?.

பதில்:– ஆட்சி மாற்றத்துக்கான கூட்டமல்ல இது. விவசாயிகளின் நல்வாழ்வை அடிப்படையாக வைத்து நடைபெறும் கூட்டம். தயவுசெய்து, ஆட்சி மாற்றம் குறித்து என்னிடம் கருத்து கேட்பதை தவிர்த்து, தினகரன் வீட்டில் ஆலோசனை நடந்து கொண்டிருப்பதாக செய்தி வருகிறது, எனவே, அங்கு சென்று கேட்டறிந்து கொள்ளுங்கள்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

மேலும் செய்திகள்