ஜெயலலிதா இறுதிச்சடங்கு முடியும் முன் ஓ.பி.எஸ். பதவி ஏற்றதன் மர்மம் என்ன? தம்பித்துரை

ஜெயலலிதா இறுதிச் சடங்கு முடியும் முன் ஓ.பன்னீர்செல்வம் பதவி ஏற்றது ஏன்? இறப்புக்காக காத்து இருந்தாரா? என தம்பித்துரை கேள்வி விடுத்து உள்ளார்.

Update: 2017-03-04 07:07 GMT
சென்னை, 

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் உள்கட்சி பூசலால் அ.தி.மு.க. சசிகலா அணி மற்றும் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணி என இரண்டாக உடைந்தது. 

அ.தி.மு.க.வை கைப்பற்றும் முயற்சியாக தமிழகம் முழுவதும் உள்ள கட்சி தொண்டர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஓ.பன்னீர்செல்வம் ஈடுபட்டுள்ளார். உள்ளாட்சி தேர்தலின்போது ஓ.பன்னீர்செல்வம் செல்லஉள்ள நீதி கேட்கும் பயணம் மற்றும் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மத்தை விலக்கும் வகையில் மேற்கொள்ள உள்ள உண்ணாவிரத போராட்ட ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டு சிகிச்சை அளிக்கவேண்டும் என்ற எங்களுடைய கோரிக்கையை ஏற்கவில்லை என்று இன்று ஓ.பன்னீர்செல்வம் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் பல குற்றச்சாட்டுகள் பன்னீர்செல்வம் தரப்பில் முன்வைக்கப்பட்டு வருகிறது.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் அணியினர் பல்வேறு பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்கள். அவர்களுக்கு அ.தி.மு.க. சசிகலா அணி நிர்வாகிகள் பதிலடி கொடுத்து வருகிறார்கள். இன்று பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை சென்னையில் நிருபர்களிடம் பேசுகையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் பல்வேறு தகவல்களை அவதூறாக பரப்பி வருகிறார்கள். ஜெயலலிதா இறுதிச் சடங்கு முடியும் முன் ஓ.பன்னீர்செல்வம் முதல் - அமைச்சராக பதவி ஏற்றதன் மர்மம் என்ன என்பதை அவர் விளக்க வேண்டும். ஜெயலலிதா எப்போது இறப்பார்? எப்போது பதவி ஏற்கலாம் என காத்து இருந்தாரா? 

ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் இருந்த போது எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை பன்னீர்செல்வம் கூட்டியது ஏன்? எம்.எல்.ஏ.க்களிடம் அவசர அவசரமாக இவர் கையெழுத்து வாங்கியது ஏன்? இதுபோன்ற கேள்விகளுக்கு ஓ.பன்னீர்செல்வம் பதில் அளிக்க வேண்டும் என்றார். 

மேலும் செய்திகள்