வியாபாரிகள், பொதுமக்கள் திரளாக பங்கேற்றதால் நெடுவாசல் போராட்டம் தீவிரம் அடைந்தது

நெடுவாசலில் இயற்கை எரிவாயு எடுப்பதற்கு எதிராக நடந்து வரும் நெடுவாசல் போராட்டத்தில் வியாபாரிகள், பொதுமக்கள் திரளாக பங்கேற்றதால் மேலும் தீவிரம் அடைந்து உள்ளது.

Update: 2017-03-01 22:45 GMT
வடகாடு,

பல தரப்பினரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

14-வது நாள் போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகாவை சேர்ந்த நெடுவாசல், நல்லாண்டார் கொல்லை, கருக்கா குறிச்சி, கோட்டை காடு, வாணகன் காடு ஆகிய இடங்களில் ‘ஹைட்ரோ கார்பன்’ எனும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மாதம் (பிப்ரவரி) 16-ந்தேதியில் இருந்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

நெடுவாசல் நாடியம்மன் கோவில் குளக்கரையில் நேற்று 14-வது நாளாக தர்ணா போராட்டம் தொடர்ந்தது.

தீவிரம் அடைந்தது

நேற்றைய போராட்டத்தில் நெடுவாசல் மற்றும் சுற்று வட்டாரங்களில் உள்ள 100 கிராமங்களை சேர்ந்தவர்கள் மட்டும் இன்றி வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களும் அதிக அளவில் பங்கேற்றனர். நெடுவாசல் மக்களின் அறவழி போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து புதுக்கோட்டை, ஆலங்குடி உள்பட மாவட்டம் முழுவதும் வியாபாரிகள் மற்றும் வர்த்தக சங்கத்தினர் கடை அடைப்பு போராட்டம் நடத்தினார்கள்.

வியாபாரிகள் கடைகளை அடைத்து விட்டு நெடுவாசல் போராட்ட களத்திற்கு அணி திரண்டு வந்து பங்கேற்றனர். வியாபாரிகள், பெண்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்றனர்.

பல தரப்பினரும் ஆதரவு

சென்னையில் இருந்து திரைப்பட உதவி இயக்குனர்கள், துணை நடிகர்கள் உள்பட 30 பேர் தமிழக திரைத்துறை சார்பில் பங்கேற்றனர். சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடந்த போராட்டத்தின்போது 7 நாட்கள் பங்கேற்றதாக கூறிய இவர்கள் நெடுவாசல் போராட்ட களம் முடிவுக்கு வரும் வரை இங்கேயே தங்க போவதாக கூறினார்கள். கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள் ஒருங்கிணைப்பு குழு தலைவர் சுப. உதயகுமார், நடிகர் மன்சூர் அலிகான், சமூக ஆர்வலர் ‘டிராபிக்’ ராமசாமி, மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார், திருச்சி மாநகராட்சி முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான், ராஜீவ் காந்தி கொலை வழக்கு தூக்கு தண்டனை கைதியான பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் உள்ளிட்ட பிரமுகர்கள் பங்கேற்று ஆதரவு தெரிவித்து பேசினார்கள்.

வியாபாரிகள், பல்வேறு விவசாய சங்க தலைவர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், வெளி இடங்களில் பணியாற்றி வரும் தனியார் நிறுவன ஊழியர்கள், கல்லூரி மாணவ-மாணவிகள் என பல தரப்பட்டவர்களும் ஆதரவு தெரிவித்து வருவதால் நெடுவாசல் போராட்ட களம் மேலும் தீவிரம் அடைந்து உள்ளது.

மேலும் செய்திகள்