ராமவரம் தோட்டத்தில் எம்.ஜி.ஆர். சிலையை சசிகலா திறந்து வைத்தார்

மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவையொட்டி ராமவரம் தோட்டத்தில் எம்.ஜி.ஆர். சிலையை சசிகலா திறந்து வைத்தார்.

Update: 2017-01-17 08:25 GMT

மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவையொட்டி அவர் வாழ்ந்த ராமவரம் தோட்டத்தில் உள்ள சிலை புதுப்பிக்கப்பட்டது. அந்தச் சிலையை அ.தி.மு.க. பொது செயலாளர் சசிகலா இன்று பகல் 11.50 மணிக்கு திறந்து வைத்தார். முன்னதாக ராமவரம் தோட்ட இல்லத்தின் வாசலில் உள்ள கொடி கம்பத்தில் அ.தி.மு.க. கொடியேற்றி வைத்தார்.

சசிகலாவுக்கு எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கல்லூரி மாணவிகள் பேண்டு வாத்தியம் முழங்க வரவேற்பு கொடுத்தனர். எம்.ஜி.ஆர். காது கேளாதோர், வாய்பேச முடியாதோர் பள்ளி மாணவ-மாணவிகள் இருபுறமும் அணிவகுத்து நின்று வரவேற்பு அளித்தனர்.

பின்னர் ராமவரம் தோட்ட இல்லத்தின் பின்புறம் உள்ள எம்.ஜி.ஆர். காது கேளாதோர்-வாய்பேச முடியாதோர் பள்ளிக்கு சென்றார். அங்கு பயிலும் மாணவ-மாணவிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடந்தது. இதில் சசிகலா கலந்து கொண்டு அந்த பள்ளிக்கு ரூ.10 லட்சம் நிதி வழங்கினார். மாணவ-மாணவிகளுக்கு காது கேட்கும் கருவி உள்ளிட்ட ரூ.15 லட்சம் மதிப்புள்ள உதவிகள் வழங்கினார்.

மாணவ-மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. அவர்களுடன் சசிகலாவும் அமர்ந்து உணவு சாப்பிட்டார். இந்த நிகழ்ச்சிகளில் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை மற்றும் அமைச்சர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்