அறுவடைக்கு தயாராக இருந்த 2 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின

அறுவடைக்கு தயாராக இருந்த 2 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின

Update: 2022-09-26 19:48 GMT

தஞ்சை மாவட்டத்தில் பெய்த கன மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த 2 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கொட்டிய மழை

தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டி வதைத்து வந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு மழை கொட்டித்தீர்த்தது. காவிரி டெல்டா மாவட்ட பாசனத்துக்காக இந்த ஆண்டு முன்கூட்டியே அதாவது மே மாதத்திலேயே மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் குறுவை சாகுபடி தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 72 ஆயிரத்து 816 எக்டேரில் செய்யப்பட்டது.

தற்போது பயிர்கள் வளர்ந்துள்ள நிலையில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் அறுவடை பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இன்னும் 2 வாரத்திற்குள் அறுவடை பணிகள் முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்டது.

நெற்பயிர்கள் சாய்ந்தன

தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, பூதலூர், ஒரத்தநாடு, பாபநாசம் ஆகிய தாலுகாக்களில் தற்போது குறுவை நெல் அறுவடை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இந்த மழையினால் பெரும் பாதிப்பை விவசாயிகள் எதிர்கொள்ள நேரிட்டுள்ளது. குறிப்பாக வல்லம், ஆலக்குடி, புதுகல்விராயன்பேட்டை, கரம்பை ஆகிய பகுதிகளில் அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்த நெற்பயிர்கள் சாய்ந்ததோடு, தண்ணீரில் மூழ்கியது.

ஒரு சில இடங்களில் விவசாயிகள் அறுவடைக்காக தங்கள் வயல்களில் நெல் அறுவடை எந்திரங்களை நிறுத்தி வைத்து இருந்தனர். ஆனால் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் வயல் முழுவதும் தண்ணீர் தேங்கி நெற்கதிர்கள் நீரில் மூழ்கியது. சுமார் 2 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கியதால் நேற்று அறுவடை செய்ய முடியவில்லை. அறுவை நெல் எந்திரமும் சேறு சகதியில் சிக்கி கொண்டதால் வெகு சிரமத்துக்கு பின்னர் எந்திரம் வெளியே எடுக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

நெல் மூட்டைகள் சேதம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் செயல்படும் பல நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்கள் குவியல் குவியலாக குவித்து வைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு கொட்டித் தீர்த்த மழையால் ஈரப்பதம் அதிகரித்துள்ளதால், கொள்முதல் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்று பெரும்பாலான இடங்களில் கொள்முதல் பணிகள் நடைபெறவில்லை.

கல்விராயன்பேட்டையில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட 300 மூட்டை நெல் போதிய பாதுகாப்பு இல்லாமல் வைத்துள்ளனர். இரவு பெய்த மழையினால் நெல் மூட்டைகள் சேதமாகியுள்ளது. கொள்முதல் நிலையங்களில் நெல் அதிகமாக இருப்பதால் கொள்முதல் பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு

இதுகுறித்து வேளாண்மைத்துறை அதிகாரிகள் கூறுகையில்: எதிர்பாராதவிதமாக பெய்த மழையினால் குறுவை நெல் அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் சுமார் 2 ஆயிரம் ஏக்கரில் பாதிக்கப்பட்டிருக்கலாம். அதே போல் சம்பா நாற்றங்காளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இந்த மழை பாதிப்புகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்