18 கிலோ தங்கம் சிக்க காரணமாக இருந்த 20 ரூபாய் நோட்டு
மண்டபம் அருகே கடத்தல்காரர்கள் கடலில் வீசிய 18 கிலோ தங்கம் அதிகாரிகள் வசம் சிக்குவதற்கு ஒரு 20 ரூபாய் நோட்டும் காரணமாக இருந்துள்ளது.
பனைக்குளம்,
மண்டபம் அருகே கடத்தல்காரர்கள் கடலில் வீசிய 18 கிலோ தங்கம் அதிகாரிகள் வசம் சிக்குவதற்கு ஒரு 20 ரூபாய் நோட்டும் காரணமாக இருந்துள்ளது.
18 கிலோ தங்கம் மீட்பு
ராமேசுவரத்திற்கு மிக அருகில் இலங்கை கடல் பகுதி உள்ளது. இந்த கடல்வழியாக கடத்தல் சம்பவங்கள் நடந்து வருகின்றன.
இ்ந்த நிலையில் இலங்கையில் இருந்து மண்டபத்தை நோக்கி கடந்த 7-ந் தேதி நள்ளிரவில் தங்கக்கட்டிகள் ஒரு படகில் கடத்தி வரப்பட்டன.
மண்டபம் அருகே அந்த படகை துரத்திப் பிடிக்க கடலோர காவல் படை கப்பல் முயன்ற போது, அந்த படகில் இருந்த கடத்தல்காரர்கள் தாங்கள் கொண்டு வந்த பார்சலை கடலில் வீசிவிட்டு தப்ப முயற்சி செய்தனர். ஆனால் இந்திய கடலோர காவல் படையினர் விரைந்து சென்று, படகை மடக்கி அதில் இருந்த 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில், மண்டபத்தில் இருந்து நாகூர்கனி என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகு ஒன்றில் அவர் உள்ளிட்ட 3 பேரும் இந்திய கடல் எல்லை வரை சென்றதாகவும் அப்போது இலங்கையில் இருந்து பிளாஸ்டிக் படகு ஒன்றில் வந்த அந்தநாட்டு கடத்தல்காரர்கள் பார்சல் ஒன்றை கொடுத்துவிட்டு சென்றதாகவும் அந்த பார்சலை கொண்டு வந்தபோது, கடலோர காவல் படை கப்பலை கண்டதும் கடலில் பார்சலை வீசியதாக தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து கடலில் வீசப்பட்ட அந்த பார்சலை நேற்று முன்தினம் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர், இந்திய கடலோர காவல் படையினர் தேடி மீட்டெடுத்து, அதில் இருந்த சுமார் 18 கிலோ தங்கக்கட்டிகளை கைப்பற்றினர்.
20 ரூபாய் நோட்டு
தொடர்ந்து அந்த 3 பேரிடமும் நேற்றும் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்கள் தெரிவித்தது பற்றி அதிகாரிகள் கூறியதாவது:-
இந்த கடத்தலுக்கு மண்டபம் பகுதியை சேர்ந்த ஒருவர்தான் மூளையாக இருந்துள்ளார். அவர் உள்ளிட்ட சிலரின் ஆலோசனையின் பேரில், இந்த 3 பேரிடம் 20 ரூபாய் நோட்டு ஒன்றை கொடுத்துள்ளனர்.
அந்த நோட்டுடன் படகில் சர்வதேச கடல் எல்லையை நோக்கி செல்ல வேண்டும். பாதுகாப்பு படை கப்பல், ரோந்து படகுகள் வந்தால் சந்தேகம் வராதபடி நடந்து கொள்ள வேண்டும். இவர்களது படகை ேநாக்கி, இலங்கையை சேர்ந்த ஒரு பிளாஸ்டிக் படகு வரும். அந்த படகில் இருப்பவர்கள் அடையாளத்துக்காக இந்த 20 ரூபாய் நோட்டை கேட்பார்கள். அதை கொடுத்ததும் உறுதி செய்துகொண்டு ஒரு பார்சலை தருவார்கள். அதை வாங்கிக்கொண்டு விரைவில் கரை திரும்ப வேண்டும் என இந்த 3 பேருக்கும் கட்டளையிடப்பட்டு இருந்தது.
அதன்படி நடுக்கடலுக்கு சென்று இலங்கையில் இருந்து வந்த கடத்தல்காரர்களிடம் 20 ரூபாய் நோட்டை காண்பித்து தங்கக்கட்டிகள் பார்சலை வாங்கி வந்துள்ளனர். இதற்காக 3 பேருக்கும் சேர்த்து ரூ.30 ஆயிரம் கூலி பேசப்பட்டுள்ளது. எனவே அந்த 20 ரூபாய் நோட்டுதான், கடத்தல் தங்கம் சிக்குவதற்கு ஒரு காரணமாகவும் இருந்துள்ளது.
உயர் அதிகாரிகள் பாராட்டு
பிடிபட்ட 3 பேரையும் விசாரணைக்கு பின்னர் மதுரை கோர்ட்டில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். ரூ.10½ கோடி மதிப்புள்ள 18 கிலோ தங்கக்கட்டிகளை தேடி மீட்டெடுத்த இந்திய கடலோர காவல் படையினரை உயர் அதிகாரிகள் பாராட்டி உள்ளனர். தங்கக்கட்டிகள் கடத்தலுக்கு மூளையாக இருந்தவரையும், இதில் தொடர்புடைய வேறு சிலரையும் பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.
இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.