ஆந்திராவில் இருந்து பஸ்சில் கடத்த முயன்ற 20 கிலோ கஞ்சா பறிமுதல் - கேரளாவை சேர்ந்த 2 பேர் கைது

கும்மிடிப்பூண்டி அருகே வாகன சோதனையின் போது, அரசு பஸ்சில் 20 கிலோ கஞ்சா கடத்த முயன்ற கேரளாவை சேர்ந்த 2 பேர் சிக்கினர்.

Update: 2022-09-18 09:15 GMT

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள நவீன ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி வழியாக ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி செல்லும் அரசு பஸ்களில் கஞ்சா கடத்தி வருவது தொடர் கதையாக இருந்து வருகிறது.

இதனை தடுக்க கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு கிரியா சக்தி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் பாலசுப்பிரமணி, அய்யனாரப்பன் தலைமையில் மேற்கண்ட சோதனைச்சாவடியில் கும்மிடிப்பூண்டி உட்கோட்டத்தை சேர்ந்த 2 தனிப்படை போலீசார் 24 மணி நேரமும் வாகன சோதனயில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று சோதனையில் ஈடுபட்டிருக்கும்போது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி சென்ற ஆந்திர மாநில பஸ்சில் 10 பாக்கெட்டுகளில் கடத்த முயன்ற மொத்தம் 20 கிலோ கஞ்சா சிக்கியது. இது குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து பஸ்சில் கஞ்சா கடத்த முயன்றதாக கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த ராஜீ (வயது 45), நேசண்ட் (35) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கஞ்சா பொட்டலங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

அதேபோல், ஆந்திரா மாநிலத்தில் இருந்து திருத்தணி வழியாக தமிழகத்திற்கு கஞ்சா கடத்தி வருவதாக திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில், தனிப்படை போலீசார் தமிழக எல்லையில் அமைந்துள்ள பொன்பாடி சோதனை சாவடியில் நேற்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது ஆந்திர மாநிலம் திருப்பதியிலிருந்து தமிழகத்தை நோக்கி வந்த அரசு பஸ்சில் 18 கிலோ கஞ்சா கடத்தி வந்த ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தை சேர்ந்த லக்கே சின்னபாயி (38) என்பவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்