துணி துவைப்பதில் ஏற்பட்ட தகராறில் 2தொழிலாளர்களுக்கு கத்திக்குத்து

கரூர் அருகே துணி துவைப்பதில் ஏற்பட்ட தகராறில் கத்திக்குத்து விழுந்த 2 தொழிலாளர்களுக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2022-11-21 18:37 GMT

சர்க்கரை ஆலையில் வேலை

தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டை அருகே உள்ள சர்க்ராபள்ளி அவாநகர் பகுதியை சேர்ந்தவர் அபுதாகிர் (வயது 29). இவர் கரூர் மாவட்டம் புகழூரில் செயல்பட்டு வரும் தனியார் சர்க்கரை ஆலையில் வெல்டிங் பணிகளுக்காக என்ஜினீயரிங் ஒப்பந்தம் பெற்றுள்ளார்.

இந்நிலையில் வெல்டிங் வேலை செய்வதற்காக தஞ்சாவூர் மாவட்டம், கொத்தூர் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் மகன் சசிக்குமார் (19), அதே பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் விக்னேஷ் (21), சிவகங்கை மாவட்டம் சாத்தரசன்பட்டி அரண்மனை சிறுவயல் பகுதியை சேர்ந்த டார்வின் குமார் (25) ஆகியோர் கரூர் மாவட்டம் செம்படாபாளையம் பகுதியில் உள்ள மருதாயி என்பவரது வீட்டில் தங்கி உள்ளனர். இவர்களுடன் மேலும் 8 பேர் ஒப்பந்த தொழிலாளர்களாக அங்கு தங்கி உள்ளனர்.

கத்திக்குத்து

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை துணி துவைப்பது சம்பந்தமாக டார்வின்குமார், சசிகுமார், விக்னேஷ் ஆகிய 3 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டிக் கொண்டனர். இதில் ஆத்திரமடைந்த டார்வின் குமார் தனது கையில் வைத்திருந்த பட்டன் கத்தியால் சசிக்குமார் மற்றும் விக்னேஷ் ஆகியோரை குத்தினார். இதில் சசிக்குமாருக்கு வலது கழுத்து பகுதியில் பலத்த காயமும், விக்னேசுக்கு இடது வயிற்றில் பலத்த காயமும் ஏற்பட்டது.

வழக்குப்பதிவு

இதையடுத்து சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து அபுதாகிர் வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் டார்வின்குமார் மீது வழக்குப்பதிந்து அவரை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்