சோழவரம் ஏரியில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 2 பேர் பலி

சோழவரம் ஏரியில் குளிக்க சென்ற பள்ளி மாணவர்கள் 2 பேர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் காரனோடை கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2023-07-01 08:25 GMT

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த காரனோடை கிராமம் லட்சுமி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் எஸ்வந்த் (வயது 13), காரனோடை பெரியார் நகர் முதல் தெருவை சேர்ந்த ரகுநாதனின் மகன் பால்தினகரன் (13). இவர்கள் 2 பேரும் சோழவரம் மேல்நிலைப் பள்ளியில் 8 வகுப்பு படித்து வருந்தனர்.

நேற்று முன்தினம் பக்ரீத் திருநாளையொட்டி பள்ளி விடுமுறை என்பதால் நண்பர்களான எஸ்வந்த் மற்றும் பல்தினகரன் சேர்ந்து சோழவரம் ஏரிக்கு குளிக்க சென்றனர். இவர்கள் தேவனேரி கிராமம் அருகே உள்ள உபரி நீர் திறக்கும் மதகு பகுதியில் ஏரியில் குளித்துக் கொண்டிருந்தனர். நீச்சல் தெரியாத 2 பேரும் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கினர்.

நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு 2 பேரும் வராததால் அவர்களின் பெற்றோர் ஏரியில் பல்வேறு இடங்களில் தேடினர். மாணவர்கள் இருவரையும் கண்டு பிடிக்க முடியாததால் இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர் சோழவரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் செங்குன்றம் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்து சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

தீயணைப்பு வீரர்கள் இரவு முழுவதும் தேடிய நிலையில் எஸ்வந்த் உடலை மீட்டனர். போலீசார் மாணவர் எஸ்வந்த் உடலை சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து பால்தினகரன் உடலை தேடிய நிலையில் நேற்று அவரது உடலையும் மீட்டனர்.

இந்த சம்பவம் குறித்து சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பள்ளி மாணவர்கள் 2 பேர் ஏரியில் மூழ்கி பலியான சம்பவம் காரனோடை கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்