கோவை
ஈமுக்கோழி நிறுவனம் நடத்தி ரூ.34 கோடி மோசடி செய்த வழக்கில் 2 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை டான்பிட் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
ஈமு நிறுவனம்
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் குயின் ஈமு பார்ம்ஸ் என்ற பெயரில் ஈமுக்கோழி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இதன் இயக்குனர்களாக பெருந்துறையை சேர்ந்த மயில்சாமி (வயது 36), அவருடைய தம்பி சக்திவேல் (34) ஆகியோர் இருந்து வந்தனா். மேலும் இவர்கள் இருவரும் சேர்ந்து கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் அதே பெயரில் கிளை அலுவலகம் தொடங்கி நடத்தி வந்தனர்.
இந்த நிறுவனத்தில் முதலீடு செய்யும் பொதுமக்களுக்கு சலுகை திட்டங்களை அறிவித்தனர். இதனை நம்பி பெருந்துருறை நிறுவனத்தில் 1,114 முதலீட்டாளர்கள் இந்த நிறுவனத்தில் ரூ.28 கோடியே 38 லட்சத்து 13 ஆயிரத்து 570 முதலீடு செய்தனர். இதுபோன்று பொள்ளாச்சி கிளை நிறுவனத்தில் 306 முதலீட்டாளர்கள் ரூ.5 கோடியே 65 லட்சம் முதலீடு செய்தனர். ஒட்டுமொத்தமாக இரு நிறுவனங்களிலும் ரூ.34 கோடியே 3 லட்சத்து 732 ஆகும். ஆனால் அறிவித்தப்படி அந்த நிறுவனங்களால் முதலீட்டாளர்களுக்கு திருப்பி பணம் எதுவும் வழங்கப்படவில்லை.
தலா 10 ஆண்டு சிறை
இந்த நிலையில் பெருந்துறை நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்த பொதுமக்கள் ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் கடந்த 2012-ம் ஆண்டு புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில் அவர்கள் மோசடி செய்தது தெரியவந்தது. இதற்கிடையே பொள்ளாச்சி கிளை நிறுவனத்தில் ஏமாந்த பொதுமக்கள் இதுகுறித்து கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து இரு வழக்குகள் தொடர்பாக மயில்சாமி, சக்திவேல் மற்றும் அந்த இரு நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்கள் 8 பேர் மீது இரு போலீசாரும் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த இரு வழக்குகளும் கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கோர்ட்டில் (டான்பிட்) நடைபெற்று வந்தது. இந்த இரு வழக்கிலும் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதிyல் வழக்கை விசாரித்த டான்பிட் கோர்ட்டு நீதிபதி ஏ.எஸ்.ரவி, பெருந்துறை குயின் ஈமு பார்ம்ஸ் மோசடி வழக்கில் அதன் இயக்குனர்கள் மயில்சாமி, சக்திவேல் ஆகியோருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.28 கோடியே 72 லட்சத்து 32 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். பொள்ளாச்சி நிறுவன வழக்கில் இருவருக்கும் தலா 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 கோடியே 68 லட்சம் அபராமும் விதித்து தீர்ப்பளித்தார்.