வீடு புகுந்து சமையல் கியாஸ் சிலிண்டர் திருடிய 2 பேர் கைது

வேலூர் சத்துவாச்சாரியில் வீடு புகுந்து சமையல் கியாஸ் சிலிண்டர் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-07-02 15:12 GMT

வேலூர் சத்துவாச்சாரி பொன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மனோஜ் (வயது 21). இவருடைய வீட்டின் முன்பகுதியில் காலியான சமையல் கியாஸ் சிலிண்டரை வைத்திருந்தார். மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் மனோஜ் வீட்டின் அருகே நின்று பேசி கொண்டிருந்தனர். திடீரென அதில் ஒருவர் வேகமாக வீட்டிற்குள் சென்று சிலிண்டரை தூக்கி கொண்டு வெளியே வந்தார்.

பின்னர் அதனை மோட்டார் சைக்கிளில் வைத்து அங்கிருந்து தப்பி செல்ல முயன்றனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மனோஜ் திருடன்... திருடன்... என்று சத்தம் போட்டார். அவரின் அலறல் சத்தம் கேட்டு தெருவில் இருந்த பொதுமக்கள் இருவரையும் மோட்டார் சைக்கிளுடன் மடக்கி பிடித்து அடித்து உதைத்தனர்.

தகவலறிந்த சத்துவாச்சாரி போலீசார் அங்கு சென்று 2 பேரையும் பொதுமக்களிடம் இருந்து மீட்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். அதில், அவர்கள் வேலூர் சங்கரன்பாளையத்தை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 46), வேலூர் கஸ்பா வசந்தபுரத்தை சேர்ந்த கார்த்திக் (23) என்று தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள், சமையல் கியாஸ் சிலிண்டர் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்