கந்துவட்டி கொடுமையால் தம்பதி தற்கொலை வழக்கில் தலைமறைவான 2 பேர் திருப்பதியில் கைது

கும்மிடிப்பூண்டி அருகே கந்து வட்டி கொடுமையால் கணவன், மனைவி இரண்டு பேரும் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த 2 பேரை ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

Update: 2023-08-07 09:30 GMT

கந்து வட்டி

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் உள்ள பிள்ளையார் கோவில் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் பிரகாஷ் (வயது 48). இவரது மனைவி சரிதா (40). இவர்களுக்கு திருமணம் ஆகி சுமார் 14 வருடங்கள் ஆன நிலையில் குழந்தைகள் ஏதும் இல்லை. பிரகாஷ் சொந்தமாக ஒரு காரை வைத்துகொண்டு அதனை வாடகைக்கு ஓட்டி வந்தார். இவர் கொரோனா காலகட்டத்தில் அதே பகுதியில் உள்ள ராஜா என்பவரிடம் 10 வட்டிக்கு கடன் வாங்கி உள்ளார். கடந்த 2 வருட காலமாக கந்துவட்டி கொடுத்து வந்து உள்ளார்.

விஷம் குடித்து தற்கொலை

தற்போது அசலும் வட்டியும் சேர்த்து ரூ.2 லட்சம் கேட்டு ரவுடிகளை வைத்தும் தனது நண்பர்களை வைத்தும் ராஜா மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பிரகாஷ், தனது மனைவி சரிதாவுடன் சேர்ந்து கடந்த மாதம் 28-ந் தேதி ஏழுகண் பாலம் அருகே விஷம் குடித்தார். சிகிச்சை பலனின்றி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். தனக்கு ஏற்பட்ட கந்து வட்டி பிரச்சினை குறித்தும் தற்கொலைக்கு காரணமானவர்கள் குறித்தும் வீடியோ ஒன்றை பதிவிட்டு நண்பர்களுக்கு அனுப்பிய பிரகாஷ், கடிதம் ஒன்றையும் எழுதி வைத்து இருந்தார்.

கைது

கணவன், மனைவி தற்கொலைக்கு காரணமான கந்து வட்டி ராஜா (36) மற்றும் அவரது நண்பரான நியாஸ் (39) ஆகிய 2 பேர் மீது ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அவர்களை கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

இந்த நிலையில் ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே மேற்கண்ட 2 பேரையும் தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்