கார் மீது பஸ் மோதி சிறுவன் உள்பட 2 பேர் பலி

கரூர் அருகே கார் மீது பஸ் மோதி சிறுவன் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

Update: 2023-07-16 18:14 GMT

பஸ் மோதல்

கரூர் திருப்பதி லே-அவுட் யை சேர்ந்தவர் வைக்கிங் கோச் கிருஷ்ணன். இவரது மகன் ராம்குமார் (வயது 37). இவர் கரூர் பஸ் நிலையத்தில் டீக்கடை நடத்தி வருகிறார். இந்தநிலையில் ராம்குமார் நேற்று தனது தாய் மோகனா (65), அக்கா மகன் தருண் (10) ஆகியோரை அழைத்து கொண்டு கரூரில் இருந்து கோவையில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தார்.

அந்த கார் கரூர்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் க.பரமத்தி அருகே உள்ள ரங்கநாதபுரம் பிரிவு சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது திருப்பூரில் இருந்து கரூரை நோக்கி அதிவேகமாக வந்த தனியார் பஸ் எதிர்பாராத விதமாக கார் மீது பயங்கரமாக மோதியது.

சிறுவன் உள்பட 2 பேர் பலி

இதில் கார் அப்பளம்போல் நொறுங்கியது. அதில் சிக்கிய ராம்குமார், தருண் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மேலும், மோகனா, தனியார் பஸ் டிரைவர் திருப்பூரை சேர்ந்த தியாகு (35) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த க.பரமத்தி போலீசார், தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்த மோகனா, தியாகுவை பொதுமக்கள் உதவியுடன் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வழக்கு

பின்னர் ராம்குமார், தருண் ஆகியோரது உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து க.பரமத்தி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் 2 பேர் இறந்த சம்பவம் அவர்களது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்