காட்டுப்பன்றி இறைச்சியை விற்பனை செய்த 2 பேருக்கு அபராதம்

திருவண்ணாமலை அருகே காட்டுப்பன்றி இறைச்சியை விற்பனை செய்த 2 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2023-04-25 14:35 GMT

திருவண்ணாமலை கண்ணமடை காப்புக்காடு பகுதியில் காட்டுப்பன்றிகள் வேட்டையாடப்படுவதாக திருவண்ணாமலை சரக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் திருவண்ணாமலை வனச்சரக அலுவலர் சீனிவாசன் தலைமையில் வனக்காப்பாளர்கள் முகமதுசுல்தான், சங்கீதா, திவானி உள்ளிட்டோர் கொண்ட குழுவினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது திருவண்ணாமலை அருகில் உள்ள எடப்பாளையம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த ஆறுமுகம் (வயது 55), பாவுப்பட்டு அருகில் உள்ள எலிக்குத்தி கிராமத்தை சேர்ந்த காசி (67) ஆகியோர் காட்டுப்பன்றியை வேட்டையாடியதும், பின்னர் அவர்கள் அதனை அறுத்து கூறு போட்டு பொட்டலமாக கட்டி எலிக்குத்தி கிராமத்தில் கூடையில் வைத்து காட்டுப்பன்றி இறைச்சியை விற்பனை செய்து கொண்டிருந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்த 2 பேரையும் வனத்துறையினர் பிடித்தனர்.

பின்னர் அவர்களை வனத்துறையினர் திருவண்ணாமலை வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

இதையடுத்து மாவட்ட வன அலுவலர் அருண்லால் உத்தரவின் பேரில் அவர்கள் இருவருக்கும் சேர்த்து ரூ.60 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு எச்சரிக்கை செய்து விடுவிக்கப்பட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்